மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: மாணவர்களுக்கான லேப்டாப்: தரம் குறைக்க முயன்ற ஐஏஎஸ் அதிகாரிகள்!

டிஜிட்டல் திண்ணை: மாணவர்களுக்கான லேப்டாப்: தரம் குறைக்க முயன்ற  ஐஏஎஸ் அதிகாரிகள்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“மாணவர்களுக்கு கொடுக்கப்படும் இலவச லேப்டாப்க்கான டெண்டர் இந்த ஆண்டு லெனோவா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. லெனோவா நிறுவனம் மிகவும் குறைவான தொகையை நிர்ணயம் செய்திருந்ததால் அவர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது. லெனோவா நிறுவனத்திலிருந்து இரண்டு மாடல் லேப்டாப் அரசு ஒப்புதலுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு லேப்டாப்பின் சிஸ்மார்க் (செயல் திறனைக் குறிப்பிடும் அளவீடு ) 480. இன்னொரு லேப்டாப்பின் சிஸ்மார்க் 260. மாணவர்களுக்கு எந்த லேப்டாப் கொடுக்கலாம் என ஆர்டர் வாங்குவதற்கு முன்பாக, ஐ.டி.செகரெட்டரி சந்தோஷ் பாபுவையும், எல்கார்ட் எம்.டி. விஜயகுமாரையும் சம்பந்தப்பட்ட லெனோவா நிறுவனத்தை சேர்ந்த சிலர் சந்தித்திருக்கிறார்கள். எல்காட் எம்.டி. விஜயகுமார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செகரெட்டரி விஜயகுமாரின் மைத்துனர்.

அப்போது, ‘260 சிஸ்மார்க் லேப்டாப் கொடுத்தாலே போதும். அதிலேயே ஓரளவுக்கு தேவையான எல்லாமே இருக்கும். எங்ககிட்ட அந்த மாடல் நிறைய ஸ்டாக் இருக்கு. இதற்கு நீங்க அனுமதிக்கணும்’ என்று லெனோவா தரப்பில் அழுத்தமாக பேசியிருக்கிறார்கள். இதன் பிறகு இருவரும் சிஸ்மார்க் 260 கொண்ட லேப்டாப்புக்கு ஒப்புதல் வழங்கிவிட்டார்கள். மொத்தம் பதினைந்து லட்சத்து அறுபத்தைந்தாயிரம் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க வேண்டும். செயல் திறன் குறைந்த லேப்டாப்பும், செயல் திறன் அதிகம் கொண்ட லேப்டாப்பும் ஒரே விலைதான்.

லேப்டாப் தொடர்பான விவரங்களை நன்கு அறிந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனின் நண்பர் ஒருவருக்கு இந்தத் தகவல் தெரிந்திருக்கிறது. அவர் லேப்டாப் சம்பந்தமான விபரங்களைக் கேட்டு வாங்கிப் பார்த்திருக்கிறார். பிறகு செங்கோட்டையனிடம், ‘5 லட்ச ரூபாயில் உங்களுக்கு ஆடி காரும் கிடைக்குது. அம்பாஸிடர் காரும் கிடைக்குது. எதை நீங்க வாங்குவீங்க?’ என கேட்டிருக்கிறார். அதற்கு செங்கோட்டையன், ‘இதுல என்ன சந்தேகம்? ஆடி கார் தான்’ என சொன்னாராம். அதற்கு அவரது நண்பர், ‘இந்த லேப்டாப்பும் அப்படித்தான். இவங்க காட்டியிருக்கும் இரண்டு மாடல்களும் ஒரே விலைதான். ஆனால், இதன் செயல்திறன் அப்படியே டபுளாக இருக்கு. அதிகாரிகள் ஓகே பண்ணியிருக்கும் லேப்டாப்பில் அதுல பாதிதான்.. அப்படி இருக்க இதை எதுக்கு கொடுக்கிறாங்க?’ என கேட்டிருக்கிறார்.

அதைக் கேட்டு ஷாக் ஆன செங்கோட்டையன், ‘எனக்கு தெரியாம அந்த மணிகண்டன் எதுவும் இதுல தலையிட்டாரான்னு தெரியலை. நீங்க எனக்கு இது சம்பந்தமாக தெளிவாக தமிழ்ல எழுதி கொடுங்க. நான் முதல்வர்கிட்ட பேசுறேன்..’ என்று சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அமைச்சர் மணிகண்டனுக்கும் இந்த டெண்டருக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கிறதா என விசாரித்திருக்கிறார். ஆனால், இந்த டெண்டரை பொறுத்தவரை அமைச்சர் மணிகண்டன் தலையீடு இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. அதன் பிறகு முதல்வரையும் சந்தித்திருக்கிறார் செங்கோட்டையன். முதல்வருக்கு புரிய வைக்க ஆடி கார்.. அம்பாஸிடர் கார் உதாரணத்தையே சொல்லி விளக்கி இருக்கிறார். தமிழில் கையோடு கொண்டு போன லேப்டாப் தொடர்பான குறிப்புகளையும் முதல்வரிடம் கொடுத்திருக்கிறார். வாங்கிப் பார்த்துவிட்டு, ‘நான் பார்த்துக்குறேன்’ என எடப்பாடி சொல்லிவிட்டாராம்.

செங்கோட்டையன் லேப்டாப் விவகாரத்தில் தலையிட்டது எதுவும் தெரியாமல் எல்காட் எம்.டி. விஜயகுமார் முதல்வரை சந்திக்கப் போயிருக்கிறார். ‘போன வருஷம் வரைக்கும் லேப்டாப்ல அம்மா படம் மட்டும்தான் போட்டோம். இந்த வருஷம் உங்க படமும் போட திட்டமிட்டு இருக்கோம்’ என்று சொல்லி இருக்கிறார்.

அதைக் கேட்டதும் டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி, ‘என்னை என்ன முட்டாள்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? நல்ல பொருள் எதையும் வாங்கிக் கொடுக்க மாட்டீங்களா? ஏற்கெனவே இந்த லேப்டாப் விவகாரத்துல கேஸ்லாம் இருக்குன்னு கேள்விப்பட்டேன். இப்போ, செயல்திறன் கம்மியா இருக்கிற லேப்டாப்பை பசங்களுக்கு கொடுத்து ஏமாத்துறீங்களா? செயல் திறன் அதிகம் இருக்கிற லேப்டாப்தான் பசங்களுக்கு போகணும். இல்லைன்னா நடக்கிறதே வேற. நீங்க பசங்களை மட்டும் ஏமாத்தல... என்னையும் சேர்த்துதான் ஏமாத்திட்டு இருக்கீங்க..’ என்று காய்ச்சி எடுத்திருக்கிறார் எடப்பாடி. பதில் சொல்ல முடியாமல் விஜயகுமார் திணறியிருக்கிறார்.

முதல்வர் அறையிலிருந்து வெளியே வந்த விஜயகுமார், ‘சி.எம். ரொம்பவும் டென்ஷன் ஆகிட்டாரு. லேப்டாப்ல அவரு ஏதோ திறன்னு சொல்றாரு. எனக்கு அது புரியவே இல்ல..’ என யாருக்கோ போன் செய்து பேசியிருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்த மறுநாளே தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பைனான்ஸ் செகரெட்டரி கே.சண்முகம், எக்ஸ்பெண்டிச்சர் செகரெட்டரி சித்திக் ஆகியோர் தலைமையில் மீட்டிங்கும் நடந்திருக்கிறது. எல்காட் எம்.டி. விஜயகுமார், ஐ.டி. செகரெட்டரி சந்தோஷ்பாபு ஆகியோரும் அந்த கூட்டத்தில் பங்கேற்றார்களாம்.

சித்திக் பேசும்போது, ‘சி.எம். ரொம்பவும் டென்ஷன் ஆகிட்டாரு. அதிக கெப்பாஸிட்டி உள்ள லேப்டாப்தான் வாங்கணும்ணு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு. சாதாரண ஆளுக்கு கூட 4 பெருசா 8 பெருசான்னு தெரியும். நீங்களா எதுக்கு இந்த மாடலை முடிவு பண்ணினீங்க? நீங்க எல்லாம் என்னத்துக்கு டெக்னிக்கல் கமிட்டின்னு போட்டு உட்கார்ந்து இருக்கீங்க? உங்களால இப்போ எனக்கும் கெட்ட பேரு. இனி உங்க யாரையும் நான் நம்புறதாவே இல்ல.. எல்லாத்தையும் மாற்றி ரீ வொர்க் பண்ணுங்க..’ என்று கோபத்துடன் சொன்னாராம். அதன் பிறகுதான் எல்லாவற்றையும் மாற்றி, அதிக செயல் திறன் கொண்ட லேப்டாப் ஃபைலுடன் முதல்வரைப் பார்த்திருக்கிறார்கள். ‘எல்லாத்தையும் மாத்திட்டோம் சார். 18ஆம் தேதிதான் அடுத்த வொர்க்கிங் டே. அன்னைக்கு ஃபைல் அனுப்பிடுறோம்..’ என்று எல்காட் எம்.டி விஜயகுமார் சொல்லியிருக்கிறார். ‘இப்பவே லேட். சீக்கிரம் பண்ணுங்க. என்னை ஏமாத்தணும்னு நினைச்சீங்கன்னா நீங்கதான் ஏமாந்து போவீங்க...’ என்று சொல்லி அனுப்பி இருக்கிறார் எடப்பாடி.

லேப்டாப்பில் சிஸ்மாக் விவரமெல்லாம் முதல்வருக்கு எப்படி தெரிஞ்சுது, யாரு போட்டுக் கொடுத்திருப்பாங்க என்பதுதான் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது “ என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

“யாரு போட்டுக்கொடுத்தால் என்ன... எப்படியோ இந்த வருடம் மாணவர்களுக்கு நல்ல லேப்டாப் கிடைக்கப் போகுது. அதுவரைக்கும் சந்தோஷம்தானே!” என்ற கமெண்ட் போட்டுவிட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

புதன், 16 ஜன 2019

அடுத்ததுchevronRight icon