மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 21 பிப் 2020

அலோக் வர்மா: ஆவணங்களை வெளியிடும்படி பிரதமருக்குக் கடிதம்!

அலோக் வர்மா: ஆவணங்களை வெளியிடும்படி பிரதமருக்குக் கடிதம்!

அலோக் வர்மா பணி நீக்கம் தொடர்பான முக்கிய ஆவணங்களை வெளியிடும்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

சிபிஐ தலைவர் அலோக் வர்மா பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை, ஜனவரி 10ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்வுக் குழு குறித்த தகவல்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வெளியிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார். மூன்று உறுப்பினர்கள் அடங்கிய தேர்வுக் குழுவில் மல்லிகார்ஜுன் கார்கே எதிர்க்கட்சி தரப்பு பிரதிநிதியாக இருந்தார். பிரதமர் மோடி மற்றும் நீதிபதி ஏ.கே.சிக்ரியின் வாக்குகளால் அலோக் வர்மா சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதுகுறித்து மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், “சிபிஐக்கு ஒரு சுதந்திரமான இயக்குநர் இருப்பது குறித்து அரசு அச்சப்படுவதையே அரசின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்த முக்கிய ஆவணங்களை வெளியிடுவதன் மூலம் அரசு தன் மீதான களங்கங்களை நீக்க வேண்டும். ஆவணங்கள் வெளியிடப்பட்டால் பொதுமக்கள் அவர்கள் தரப்பு முடிவுக்கு வருவார்கள். சட்ட மற்றும் இயற்கை நீதியின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தேர்வுக் குழு உறுப்பினர்களிடம் நான் எவ்வளவோ கூறியும், மத்திய கண்காணிப்புக் குழு அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுத்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

அரசின் சூழ்ச்சி நடவடிக்கைகளால் நீதித் துறைக்கும் மிகுந்த உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன் தெரிவித்தார். தேர்வுக் குழுவின் முடிவை நியாயப்படுத்துவதற்கு நீதித் துறை தரப்பு உறுப்பினர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய மல்லிகார்ஜுன், அலோக் வர்மாவை நீக்கியதும், சிபிஐக்கு இடைக்காலத் தலைவரை நியமித்ததும் சட்டவிரோதம் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், எந்தத் தாமதமுமின்றி உடனடியாக சிபிஐக்கு இயக்குநரை நியமிப்பதற்குத் தேர்வுக் குழுக் கூட்டத்தை உடனடியாக நடத்தும்படி அரசை அவர் கேட்டுக்கொண்டார்.

புதன், 16 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon