மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 25 ஜன 2021

30 ஆண்டு தவத்தில் கிடைத்த வள்ளுவர்!

30 ஆண்டு தவத்தில் கிடைத்த வள்ளுவர்!வெற்றிநடை போடும் தமிழகம்

கோமல் அன்பரசன்

வாழ்வின் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. ஏதாவது ஒரு கனவு நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும் அல்லது அந்தக் கனவை நாம் துரத்திக்கொண்டிருப்போம். ஏதோ ஒரு கணத்தில், ஏதோ ஓர் இடத்தில் சட்டென அது வசப்பட்டுவிடும். கனவை வென்றெடுத்த அந்தக் கணமும் இடமும் அழியாத கல்வெட்டாகிவிடும். என்றைக்கும் தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமான திருக்குறளைத் தந்தவருக்குத் திருஉருவம் தரப்பட்டது அப்படிப்பட்டதுதான்.

அந்த மனிதருக்கு மூன்று வயதில் நிமோனியா காய்ச்சல் வந்துவிடுகிறது. அப்போது ஏற்பட்ட பாதிப்பினால் எட்டு வயது வரை படுத்த படுக்கைதான். பிள்ளை பிழைத்தால் போதும் என்று நினைத்து அவரைப் பள்ளிக்கூடத்துக்குக்கூட அனுப்பவில்லை.

தந்தையை இழந்தவருக்குத் தாத்தா சேஷகிரி சர்மாவும், தாய் மாமன் வெங்கடசுப்ரமணிய பாரதியும் வீட்டிலேயே சொல்லிக்கொடுத்தவையே கல்வி. ஆடு மாடுகளை மேய்த்தபடியே படித்ததுதான் திருக்குறள், ராமாயணம் எல்லாம். பல குரல் வித்தகம் இயல்பாகவே வந்துவிடுகிறது. அதைக் கொண்டு மைசூரு உள்ளிட்ட சமஸ்தானத்து ராஜாக்களின் அரசவையை இளம் விகடகவியாக அலங்கரிக்கிறார்.

சொந்த ஊரான சேலம், காமாட்சிப்பட்டிக்குத் திரும்பி வந்து அண்ணனைப் பார்த்து ஓவியம் வரையக் கற்றுக்கொள்கிறார். 12 வயதில் அவருக்குள் ஒரு கேள்வி எழுகிறது. வள்ளுவர் எப்படி இருப்பார்? வரைந்து பார்க்கிறார். வடிவம் பிடிபடவில்லை. வாழ்க்கை அவரைத் துரத்துகிறது. சேலம் மார்டன் தியேட்டர்ஸில் பணி புரிகிறார். சில படங்களுக்கு இசை அமைக்கிறார். பாடல் எழுதுகிறார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கிறார். காந்தியைப் படமாக வரைந்து அவருக்கே பரிசாக அளிக்கிறார். மும்பைக்குப் போகிறார். திரும்பி மதுரைக்கு வந்து ஸ்டுடியோவை விலைக்கு வாங்குகிறார். சென்னையில் வாசம் செய்கிறார்.

‘கிரீன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தொடங்கி சினிமா எடுக்க முயற்சி செய்கிறார். கேரளாவின் கோட்டயத்துக்குப் போகிறார். 1950களின் தொடக்கத்தில் பாரதிதாசன் நட்பு கிடைக்கிறது. அவரது ‘குயில்’ பத்திரிகையில் எழுதுகிறார். கே.ஆர்.வேணுகோபால் சர்மா என்கிற அந்தப் பிறவி மேதைக்குப் பெரிய வெற்றிகள் கைகூடவிடாமல் காலம் இழுத்தடிக்கிறது. ஆனாலும், இந்தப் பயணங்களில் எல்லாம் திருவள்ளுவருக்கு திருஉருவம் தந்தே தீர வேண்டும் என்கிற தாகம் அவரோடு பயணித்துக்கொண்டே இருந்தது. எதைச் செய்தாலும் வள்ளுவரும் இன்னொரு பக்கம் அவரின் மூளையில் ஓடியபடியே இருந்தார். ஏறத்தாழ 30 ஆண்டுகள் . பல நூறு முறை வரைந்து, வரைந்து பார்க்கிறார்.

1956ஆம் ஆண்டு வாக்கில் மயிலாடுதுறைக்கு வருகிறார். மணிக்கூண்டுக்குப் பக்கத்தில் இருந்த அன்றைய மாயவரம் மதீனா லாட்ஜில் தங்குகிறார். அப்போது அந்த லாட்ஜை லீசுக்கு எடுத்து நடத்திவந்தவர் கோ.வே.பதி. தமிழ் ஆர்வலரான அவருக்கு சர்மாவுடன் நட்பு ஏற்பட்டது. திருவள்ளுவர் ஓவியம் வரையும் சர்மாவின் முயற்சி, பதியை மெய்சிலிர்க்க வைத்தது. அந்தக் கலைஞனுக்குள் ஒளிந்திருந்த மேதைமையை உணர்ந்துகொண்டதால், சர்மாவைக் கைகளில், மனதில் ஏந்திக்கொண்டார்.

நாள்தோறும் பதியின் வீட்டிலிருந்து அவருக்கு மதிய உணவு வரும்போது சர்மாவுக்கும் சேர்ந்தே கொண்டுவரப்பட்டது. இதற்காகவே பெரிய கேரியர் வாங்கி இருவரும் சேர்ந்தே சாப்பிடுவார்கள். காலை உணவை காளியாகுடி ஓட்டலிலிருந்து வாங்கிக்கொடுப்பதற்கு முதல் நாளே ஏற்பாடு செய்துவிட்டுதான் இரவு வீட்டுக்குத் திரும்புவார். ஒரு படைப்பாளிக்குத் தேவையான சூழலைச் சொந்த வீட்டைப் போல, அதைவிட ஒரு படி மேலாக ஏற்படுத்தித் தந்தார் பதி.

சர்மா அங்கே தங்கியிருந்த மூன்றாண்டுகளில் அவரிடம் லாட்ஜுக்கான வாடகையை வாங்கியதே இல்லை பதி. சர்மா தங்கியிருந்த பெரிய அறையின் மாத வாடகை ரூ 45. (ஒரு பவுன் தங்கம் 75 ரூபாய்க்கு விற்ற காலம் அது) வரைந்த நேரம் போக மற்ற நேரங்களில் சர்மா பதியோடு சதுரங்கம் விளையாடுவார்.

சுந்தரம் தியேட்டருக்குப் பக்கத்தில் சோமு லாரி ஷெட்டில் நடக்கும் சிலம்பம், குஸ்தி போன்றவற்றை ஓவிய ஆசிரியர் சேது வாத்தியார் போன்றோருடன் சேர்ந்து பார்ப்பது அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

30 ஆண்டுகள் முயற்சி செய்தும் கைவரப் பெறாத வள்ளுவரின் ஓவியம் மூன்றாண்டுகளில், மயிலாடுதுறை மண்ணில் 1959இல் உருக்கொண்டது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு முந்தைய அந்த நிகழ்ச்சிகளை இப்போது மயிலாடுதுறை, கழுக்காணிமுட்டத்தில் வசிக்கும் கோ.வே.பதி நெஞ்சுருகப் பகிர்கிறார்… “எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வள்ளுவருக்கு வடிவம் கொடுத்தார் சர்மா” என்கிறார் பதி.

உலகமே இன்று ஏற்றுக்கொண்டாடுகிற வள்ளுவரின் உருவம் உயிர் பெற்றது அங்குதான். இதுதான் இயற்கையின் லீலா விநோதம்.

படைப்பாளியின் மூளை, இதயம், கரங்கள் எல்லாம் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் இடத்தில்தான் உன்னதமான படைப்பு உதயமாகிறது. அதிலும் தன்னைக் கொண்டாடுகிறவர்களுக்கு மத்தியில் எந்தக் கலைஞனும் மந்தகாசமாக எழுந்து நிற்பான். அதனால்தான் ஆண்டுக்கணக்கில் பிடிபடாத வடிவம் படாரென வனப்பும், உயிர்ப்புமாக உருக்கொண்டது. அதன் பிறகு நிகழ்ந்ததெல்லாம் அற்புதம்.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் ஏற்பாட்டில் தமிழகப் புலவர் குழு தஞ்சை ராமநாதன் அரங்கில் கூடியது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அப்போதைய மொழியியல் மற்றும் இலக்கியத் துறைகளின் தலைவர் பன்மொழிப் புலவர் தெ.போ.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட தமிழறிஞர்கள் அங்கே கூடி இருந்தார்கள். வள்ளுவர் படத்தோடு சர்மா, பாரதிதாசன், பதி ஆகியோர் தஞ்சைக்குச் சென்றார்கள். சர்மா மீது கொண்டிருந்த பேரன்பால் சிதம்பரம் தில்லை விலாஸ் ரைஸ் மில் உரிமையாளர் இவர்களின் பயணத்துக்கு கார் அனுப்பியிருந்தார். அங்கே வள்ளுவர் படத்தை வைத்து அறிஞர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சர்மாவின் சார்பில் பாரதிதாசனே பதில் சொன்னார்.

‘ஆகா… வள்ளுவர் கிடைத்துவிட்டார்’ என்று தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடியது. எதிர்க்கட்சித் தலைவர் அண்ணா பரிந்துரைத்தார். முதலமைச்சர் பக்தவத்சலம் ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பித்தார். குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் வந்து தமிழகச் சட்டப்பேரவையில் வள்ளுவர் படத்தைத் திறந்துவைத்தார். அஞ்சல் தலைகள் வெளியாகின. அண்ணா ஆட்சிக்கு வந்ததும் பாடப் புத்தகங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், அரசுப்பேருந்துகள் என அங்கிங்கெனாதபடி வள்ளுவர் எழுந்து நின்றார். இனி இவர்தான் வள்ளுவர் என்றாகிறது.

பிறந்ததன் நோக்கத்தைச் செய்து முடித்தபோது 50 வயதுகளில் இருந்த வேணுகோபால் சர்மா அதன் பிறகே திருமணம் செய்து கொள்கிறார். அவரது மகன் ஸ்ரீராம் சர்மா இப்போது சென்னையில் குறும்பட இயக்குநராக இருக்கிறார்.

வள்ளுவருக்கு வடிவம் எனும் பெருஞ்சாதனை புரிந்திருந்தாலும் அரசிடமிருந்து அதற்குரிய பலன்கள் எதையுமே பெறாமல் 1989இல் சர்மா மறைந்து போனார். ஆனாலும் மொழி, இனம், நாடு கடந்து இந்த உலகுக்கே வாழ்வின் இலக்கணத்தைத் தந்த வள்ளுவனுக்கு வடிவம் கொடுத்த போது, அவர் தன் தூரிகையில் குழைத்துப் பூசிய வண்ணத்தின் வாசனை இன்னும் காற்றில் மிதந்துகொண்டிருக்கிறது.

மயிலாடுதுறை மணிக்கூண்டுக்குப் பக்கத்தில் நாராயண பிள்ளை சந்தில் சர்மாவின் கையால் எழுதப்பட்ட முதல் பெயர்ப்பலகையோடு பதி தொடங்கிய ‘இளங்கோ நூலகம்’ அந்த நினைவுகளைச் சுமந்தபடி இப்போதும் இயங்குகிறது.

(கட்டுரையாளர் கோமல் அன்பரசன் ஊடகவியலாளர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். அரசியல், வரலாறு, வாழ்வியல், ஊடகவியல் துறைகளில் 15க்கும் மேற்பட்டநூல்களை எழுதியிருப்பவர். எழுத்துக்காகவும் ஊடகப் பணிக்காகவும் தேசிய அளவிலும் மாநில அளவிலும்விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

டெல்டா மாவட்டங்களில் கிராமப்புற வளர்ச்சி, இளைஞர் – மகளிர் - மாணவர் மேம்பாடு உள்ளிட்ட தளங்களில் பணியாற்றுகிறார். சொந்த ஊரான மயிலாடுதுறையின் உயர்வுக்காகப் பாடுபட்டுவருகிறார். கிராமப்புற மாணவர்களின்உயர் கல்விக்கு 100% உதவித்தொகையுடன், வாழ்வியல் பயிற்சிகளையும் அளித்துவரும் சென்னை ‘ஆனந்தம்’ அமைப்பின் அறங்காவலர். அவரைத் தொடர்புகொள்ள: [email protected])

புதன், 16 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon