மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 27 பிப் 2020

பிப்ரவரியைக் குறிவைக்கும் தயாரிப்பாளர்கள்!

பிப்ரவரியைக் குறிவைக்கும் தயாரிப்பாளர்கள்!

டிசம்பர் மாத இறுதியில் வழக்கத்துக்கு மாறாக முன்னணி நாயகர்கள் நடித்த படங்கள் திரையரங்கை ஆக்கிரமித்திருந்தன. ஜனவரியில் பேட்ட, விஸ்வாசம் என இரு முன்னணி நாயகர்களின் படங்கள் வெளியானதால் இந்த மாதத்தில் தங்கள் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் பிப்ரவரி மாதத்தைக் குறிவைத்து பணிகளை வேகப்படுத்தியுள்ளனர்.

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கி வரும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிவடையாததால் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி இந்தப் படத்தை வெளியிட உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜிவ் மேனன் இயக்கியுள்ள சர்வம் தாள மயம் திரைப்படம் ஜனவரி 28ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, பின் வாங்கியது. இந்தப் படமும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள பேரன்பு திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படமும் பிப்ரவரி 1ஆம் தேதியை உறுதி செய்துள்ளது.

இவை தவிர செழியன் இயக்கியுள்ள டூ லெட், பாலா இயக்கியுள்ள வர்மா எனப் பல திரைப்படங்கள் பிப்ரவரி மாதம் களம் காணவுள்ளன.

புதன், 16 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon