மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 14 ஜன 2019

காலச்சுவடு பதிப்பகத்துக்குச் ‘சிறந்த பதிப்பகம்’ விருது!

காலச்சுவடு பதிப்பகத்துக்குச் ‘சிறந்த பதிப்பகம்’ விருது!

‘பப்ளிஷிங் நெக்ஸ்ட் இன்டஸ்ட்ரி அவார்ட்ஸ்’ (PNIA) வழங்கும் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த பதிப்பகம் விருதைக் காலச்சுவடு பதிப்பகம் பெற்றுள்ளது.

ஜனவரி 12ஆம் தேதி டில்லியில் நடைபெற்ற நிகழ்வில் நாகர்கோவிலைச் சேர்ந்த காலச்சுவடு பதிப்பகத்திற்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர்களான சல்மா, பெருமாள் முருகன் ஆகியோரை அடையாளம் கண்டு வெளிக்கொண்டுவந்ததற்கும், உயர்ந்த தரத்தில் வாசகர்களுக்குத் தேவையானதை அறிந்து கொடுப்பதற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என விருதுக் குழு தெரிவிக்கிறது.

“வெளிநாட்டுப் பதிப்பகத்தாருடன் பல்வேறு தளங்களில் தங்கள் கருத்துக்களை பரிமாறி தங்கள் புத்தகங்களின் உரிமையை விற்பது, மற்றும் வெளிநாட்டுப் புத்தகங்களின் உரிமைகளை வாங்கித் தமிழில் மொழிமாற்றம் செய்து பதிப்பிப்பது எனத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டுவருகின்றனர்” எனத் தேர்வுக் குழுத் தலைவர் காலச்சுவடு பதிப்பகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் கண்ணனை மின்னம்பலம் சார்பாகத் தொடர்புகொண்டு பேசியபோது, “மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இந்த விருதுக்காக விண்ணப்பித்திருந்தோம். அப்போது ரன்னர் அப் கிடைத்தது. இப்போது விருது கிடைத்துள்ளது. சல்மா 1995ஆம் ஆண்டிலிருந்து காலச்சுவடு இதழில் எழுதிவருகிறார். அதனால் அவரை வெளிக்கொண்டுவந்தது காலச்சுவடு எனக் கூறலாம். ஆனால் பெருமாள்முருகன் இரண்டு நாவல்கள் எழுதிய பின்னர்தான் அவரைத் தொடர்புகொண்டேன். அதனால் அவரை வெளிக்கொண்டுவந்தது காலச்சுவடு எனக் கூற முடியாது. ஆனால் அவரது நூல்களைத் தமிழ் கடந்து மற்ற மொழிகளுக்குக் கொண்டு சென்றதில் காலச்சுவடுக்குப் பங்கு உள்ளது. அதைத்தான் விருதுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. இதன் மூலம் பதிப்பகத் துறையில் உள்ளவர்களுடன் உரையாடலை ஏற்படுத்துதல், தொடர்புகளை உருவாக்குதல், திறமைகளை அங்கீகரித்தல், பதிப்பகத் துறையில் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகின்றன. பத்து பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

புத்தகங்களுக்கான படங்கள் வரைந்ததற்காக 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த ஓவியர் விருது சோனல் ஸோஹாராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள டிரையாலஜி புத்தகக் கடை சிறந்த புத்தகக் கடைக்கான விருதைப் பெற்றுள்ளது. பிரேமங்கா கோஸ்வாமி சிறந்த எடிட்டருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

சுகுமாரனின் ‘பெருவலி’ நாவலுக்கான (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்) அட்டையை வடிவமைத்ததற்காக எம்.ரோகிணிக்கு இந்திய மொழிகள் பிரிவில் சிறந்த அட்டை வடிவமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. மேலும் பத்து ரன்னர் அப் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

திங்கள், 14 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon