மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019

தாமிரபரணி நீர்: ஆலைகளுக்குத் தடை!

தாமிரபரணி நீர்: ஆலைகளுக்குத் தடை!

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள தாமிரபரணி நீரை தொழிற்சாலைகள் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

தாமிரபரணி ஆற்றின் மூலமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 46,107 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அம்மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் இந்த ஆற்று நீரை நம்பியே உள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தாமிரபரணி நீரை எடுத்துப் பயன்படுத்தி வருகின்றன 21 ஆலைகள். 2011ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை எதிர்த்து, திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

“ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து எந்த தொழிற்சாலைக்கும் தாமிரபரணி நீரை வழங்கக் கூடாது. மக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே, அணையில் இருந்து எடுக்கப்படும் நீர் வழங்கப்பட வேண்டும்” என்று தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணையின் முடிவில் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

நேற்று (ஜனவரி 11) இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் மட்டுமே தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். தாமிரபரணி ஆற்று நீரைத் தொழிற்சாலைகள் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டனர். மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த வழக்கில் ஜனவரி 21ஆம் தேதிக்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

சனி, 12 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon