மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019

ஜிஎஸ்டி சலுகையால் அரசுக்கு இழப்பு!

ஜிஎஸ்டி சலுகையால் அரசுக்கு இழப்பு!

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகையால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5,200 கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.10 லட்சமாக உள்ள வடகிழக்கு மாநிலங்களில் ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இப்பயனைப் பெறுவதற்கான ஆண்டு விற்றுமுதல் அளவு ரூ.1 கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்தப்பட்டிருந்தது. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த நடவடிக்கையால் ஆண்டுக்கு ரூ.5,200 கோடி வரையில் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.3,000 கோடி கூடுதல் இழப்பு அரசுக்கு ஏற்படும் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் டி.என்.ஏ. இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வரி விலக்கு வரம்பு ரூ.75 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு உயர்த்தப்பட்டிருந்தாலும் அரசின் சுமை மேலும் அதிகரித்திருக்கும் என்று பி.டபிள்யூ.சி. நிறுவனத்தின் மறைமுக வரிப் பிரிவு பங்குதாரரான பிரதிக் ஜெயின் கூறுகிறார். அதேநேரம், பணமதிப்பழிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணிகளால் இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீளமுடியாமல் தவித்து வருவதாகவும், வரி விலக்கு வரம்பை ரூ.75 லட்சமாக உயர்த்தியிருக்கலாம் எனவும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவரான சந்திரகாந்த் சலுங்கே தெரிவித்துள்ளார்.

சனி, 12 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon