மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

கழைக்கூத்தாடியின் கம்பு!

நீங்க நல்லவரா கெட்டவரா? இதைச் சொன்னதும், நாயகன் படத்து கமல்தான் நம் நினைவுக்கு வருவார். இந்தத் திரைப்படக் காட்சி, இப்போது மீம் கிரியேட்டர்களின் சேமிப்புக் கிடங்கில் முக்கியமானதாகிவிட்டது. ஆனால், நாம் எல்லோருமே வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொண்டிருக்கக்கூடும். இதற்கான பதிலைத் தேடும்போதுதான் நாம் செய்த நல்லது, கெட்டது அனைத்தும் நினைவுக்கு வரும். அத்தனையையும் பட்டியலிட்டாலும், ஒரு முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால், நல்லவர் - கெட்டவர் என்று தனித்தனியே யாரும் அணி பிரிந்து நிற்கவில்லை.

இருளென்பது குறைந்த ஒளி என்று சொல்வது நேர்மறையான பார்வையாக இருக்கலாம். அதேநேரத்தில், இருளும் ஒளியும் கலந்துதான் இந்த உலகம். நேர்மறை சக்தியும் எதிர்மறை சக்தியும் கலந்திருந்திருந்தால் தான் இந்த உலகம் உயிர்ப்போடு இருக்கும். இதனை வலியுறுத்துகிறது சீனாவின் யின் யாங் தத்துவம்.

யின் கறுப்பு என்றால், யாங் வெள்ளை. யின் பெண் என்றால், யாங் ஆண். நம் உடலில் இருக்கும் யின், யாங் இவற்றின் சமச்சீர் தன்மை குலைந்தால் பாதிப்பு ஏற்படும் என்பது சீன மரபு. இதனை உற்றுக் கவனித்தால், நேர்மறையும் எதிர்மறையும் கலந்ததே மனித இயல்பு என்பது தெரிய வரும். உலகுக்கும் இது பொருந்தும்.

நல்லதும் கெட்டதும் கலந்த உலகை எதிர்கொண்டு வாழ்வதென்பது நிச்சயம் அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் நடமாடும் கழைக்கூத்தாடியைப் போன்றதுதான். இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று தடுமாறினாலும், கையில் தாங்கியுள்ள கம்பைக் கொண்டு இலக்கை அடைய வேண்டும்!

கழைக்கூத்தாடியின் கால்களுக்கு எதிர்முனையே இலக்கு.. நமக்கு..?!

- உதய்

முந்தைய பகுதி : இயல்பை உணர்ந்திடு!

சனி, 12 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon