மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019

மோடிக்கு இணையான தலைவர் இல்லை: ஆர்எஸ்எஸ்ஸுக்கு அமித் ஷா பதில்!

மோடிக்கு இணையான தலைவர் இல்லை: ஆர்எஸ்எஸ்ஸுக்கு அமித் ஷா பதில்!

மோடிக்கு எதிராக யாரும் இல்லை. மோடிக்கு இணையான உலகப் புகழ் பெற்ற தலைவர்கள் யாருமில்லை” என்று பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். பாஜகவின் தேசிய செயற்குழு நேற்று (ஜன. 11), இன்று (ஜன. 12) என இரண்டு நாட்கள் டெல்லியில் நடக்கிறது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பாஜகவின் பிரதிநிதிகள் சுமார் 12 ஆயிரம் பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

ஜனவரி 8ஆம் தேதி சென்னையில் நடந்த ஆர்எஸ்எஸ்சின் செயல்திட்டத்துக்கு அவசரமாக அழைக்கப்பட்டார் அமித் ஷா. அப்போது, மோடியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாமா, மோடியைத் தவிர வேறு ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாமா என்று அமித் ஷாவிடம் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் விசாரித்ததாக தகவல்கள் சங்க வட்டாரத்திலேலேயே உலவின.

அப்போது அந்தக் கூட்டத்தில், ‘கடந்த ஐந்து வருடங்களாக நாம் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இவற்றை அடிப்படையாக வைத்து மோடி, மோடி அரசு செய்த நன்மைகள் என்ற அடித்தளத்தில்தான் நாம் மக்களை அணுக முடியும், மோடி அல்லாத இன்னொருவரை முன் வைத்து நாம் பிரசாரம் செய்தால், மோடி அரசின் மீதான செயல்பாடுகளை நாமே புறக்கணித்தது மாதிரி ஆகிவிடும். அது தேர்தல் களத்தில் நமக்கு பின்னடைவைக் கூட தரலாம். மேலும் மோடியின் மீது ஏற்பட்டுள்ள ஈர்ப்பால் பல்வேறு மாநிலங்களில் நம் கட்சி வளர்ந்து வருகிறது. இந்நிலையில் அவரை தனி நபராக பார்க்காமல் கட்சியை வளர்க்கும் ஒரு கேந்திரமாக பார்க்கலாம் என்று அமித்ஷா பதில் அளித்ததாகவும் தகவல்கள் நமக்குக் கிடைத்தன.

ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் நடந்த தகவல்கள் அமித் ஷா மூலம் மோடிக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆர்.எஸ்.எஸ். தன்னைப் பற்றி வைத்திருக்கும் முழுமையான அபிப்ராயத்தை அறிந்தார் மோடி. அதன் பின்னால்தான் ஜனவரி 9ஆம் தேதி தமிழக நாடாளுமன்ற பூத் பொறுப்பாளர்களுடன் நடந்த காணொளி உரையாடலில், ‘நான் வாஜ்பாய் வழியில் கூட்டணியும் அரசும் அமைப்பேன்’ என்று தன்னை வாஜ்பாயோடு ஒப்பிட்டு காட்டிக் கொண்டார். இதன் மூலம் கூட்டணி அரசையும் தன்னால் திறம்பட நடத்த முடியுமென்று ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் ஒரு சிக்னல் கொடுத்தார் மோடி.

இந்த நிலையில் 8ஆம் தேதி சென்னை ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டெல்லியில் பாஜகவின் தேசிய செயற்குழு மூலம் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு பதில் அளிக்கும் வகையில் உரையாற்றியிருக்கிறார் அமித் ஷா.

நேற்று அமித் ஷா ஆற்றிய உரையில், “இந்த தேசமே பிரதமர் நரேந்திர மோடியின் பின்னால் உறுதியாக நிற்கிறது. மோடிக்கு நிகரான தலைவர் உலகத்தில் வேறு எங்கும் கிடையாது. மோடியின் தலைமையில் பாஜக அரசாங்கம் சுவாமி விவேகானந்தரின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் இருக்கிறது. வர் இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி, அவருக்கு எதிராக அனைத்துக் கட்சிகள் என்ற நிலையே இருக்கிறது.

ஒரு காலத்தில் காங்கிரஸ், அதை எதிர்த்து அனைவரும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது பாஜகவுக்கு எதிராக அனைவரும் என்ற நிலை இருக்கிறது. ஏன் தெரியுமா? மோடியை பிரதமர் பதவியில் இருந்து யாராலும் அகற்ற முடியாது என்பதாலேயே மகா கட்பந்தன் என்ற பெயரில் ஒன்று கூட முயற்சிக்கிறார்கள். இதுவே மோடியின் உறுதித் தன்மையை பறைசாற்றுகிறது” என்று பேசிய அமித் ஷா, “வர இருக்கும் தேர்தல் மோடிக்கும் தலைவரே இல்லாத ஒரு கூட்டணிக்கும் இடையே நடக்கும் போர். எனவே இதில் மோடி ஜெயிப்பது உறுதி. மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்” என்று பாஜக பிரதிநிதிகள் மத்தியில் பேசினார். ராமர் கோவில் கட்டுவதில் பாஜக கவனமாக இருப்பதாகவும், காங்கிரஸே அதைத் தாமதப்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தார் அமித் ஷா.

தத்துவார்த்த கட்சி என்று வர்ணிக்கப்படும் பாஜகவின் தலைவராக இருக்கும் அமித் தா நேற்று நடந்த கூட்டத்தில் பாஜக என்ற கட்சியை விட மோடி என்ற தனிநபரை புகழ்வதிலேயே அதிக வார்த்தைகளை செலவிட்டிருக்கிறார். ஆக, இது மோடியை பிரதமர் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கலாமா அல்லது மாற்றி வேறு நபரை முன்னிறுத்தலாமா என்று கேட்ட ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு அமித் ஷா அளித்திருக்கும் பதிலாகவே பாஜக வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

முந்தைய பகுதிகள் :

பாஜக பிரதமர் வேட்பாளர் யார்? ஆர்.எஸ்.எஸ். ரகசிய ஆலோசனை!

ஆர்.எஸ்.எஸ். அழைப்பு: அவசரமாய் சென்னை வந்த அமித் ஷா

மோடி பிரதமர் வேட்பாளர் இல்லை? ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் விவாதம்!

அமித் ஷாவிடம் நடந்த விசாரணை!

சனி, 12 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon