மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019

தமிழகத்தில் 44 யானைகள் கொலை!

தமிழகத்தில் 44 யானைகள் கொலை!

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 429 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

நொய்டாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரஞ்சன் தோமர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் யானைகள் கொலை குறித்த தகவல்களைக் கேட்டிருந்தார். இதற்கு வன விலங்குகள் குற்றக் கட்டுப்பாட்டு பணியகமும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அளித்துள்ள தகவலில், 2008 முதல் 2018 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 429 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதில் அதிகபட்சமாக கேரளாவில் 136 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 48 யானைகளும், கர்நாடகாவில் 46 யானைகளும், தமிழ்நாட்டில் 44 யானைகளும், வட இந்திய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் தலா 21 யானைகளும் கொல்லப்பட்டுள்ளன. 2008ஆம் ஆண்டில் மட்டும் 53 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இது 2018ஆம் ஆண்டில் 5 ஆகக் குறைந்துவிட்டது. இந்த 5 யானைகளும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவை.

இந்த குறிப்பிட்ட இந்த 10 ஆண்டுகளில் யானைத் தந்தங்களை வேட்டையாடியதற்காக 624 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யானைகளின் எண்ணிக்கை நாட்டில் மிக வேகமாகக் குறைந்து வருவதாகவும், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தனுக்கு கடிதம் ஒன்றையும் தோமர் எழுதியுள்ளார்.

சனி, 12 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon