மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019

புத்தகக் காட்சி 2019: கவனம் ஈர்க்கும் 'மார்க்சியம் - இன்றும் என்றும்'!

புத்தகக் காட்சி 2019: கவனம் ஈர்க்கும் 'மார்க்சியம் - இன்றும் என்றும்'!

பியர்சன் லினேக்கர் ச.ரே

கடந்த இரண்டு வருடங்களாக சென்னைப் புத்தகக் காட்சியில், 'பெரியார் - இன்றும் என்றும்', 'அம்பேத்கர் - இன்றும் என்றும்' என்ற தலைப்புகளில் அவர்களது தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்டது, விடியல் பதிப்பகம். இந்தப் புத்தகங்களுக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, இந்த ஆண்டின் புத்தகக் காட்சியில் 'மார்க்சியம் - இன்றும் என்றும்' என்ற தலைப்பில் சுமார் 900 பக்கங்கள் கொண்ட மூன்று தொகுதிகள் அடங்கிய புத்தகம் வெளியிட்டுள்ளது.

முதல் தொகுதியில் 1848-ல் மார்க்ஸ் - ஏங்கல்ஸ் இணையர் எழுதிய 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' எப்படி தற்போதைய சூழலுக்கும் பொருந்தும் ஒன்றாக இருக்கிறது என்பதை பத்திக்குப் பத்தி விளக்கி எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பில் கஸ்பர். இந்தக் கருத்து சார்ந்து கிரீஸ் நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வரோஃபகீஸ் எழுதிய கட்டுரையும் சேர்க்கப்பட்டுள்ளது. அதைத் தமிழில் கே. பாலசுப்பிரமணியன் மொழிபெயர்த்துள்ளார்.

இரண்டாவது தொகுதி ஒரு சுவாரஸ்யமான வெளியீடு. மார்க்ஸ் எழுதிய மூலதனத்தின் முக்கியக் கூறுகளை மையமாகக் கொண்டு, அதற்கு ஆங்கிலத்தில் சித்திர (காமிக்ஸ்) வடிவம் கொடுத்திருக்கிறார் டேவிட் ஸ்மித். இதை ச.பிரபுதமிழன் மற்றும் சி.ஆரோக்கியசாமி தமிழாக்கம் செய்திருக்கிறார்கள்.

"உழைப்பு, உழைப்பால் உருவாகும் உறவுகள், பண்டம், உபரி மதிப்பு, மூலதனப் பெருக்கத்துக்கான காரணிகள் போன்ற கோட்பாடுகளை எளிமையாக எடுத்துரைக்கும் வண்ணம் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது" என்கிறார் இந்நூலை மொழிபெயர்த்தவரில் ஒருவரான ச.பிரபுதமிழன்.

இவ்வரிசையின் கடைசித் தொகுப்பு, பரிதி எழுதிய 'மாந்தர் கையில் பூவுலகு' என்னும் சூழலியல் பற்றிய புத்தகம். நம் காலத்தின் மிக முக்கிய விவாதப்பொருளாக வடிவெடுத்துள்ளது சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள். இப்பொருளை எடுத்து விவாதிப்போர் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சட்டகத்துள் அடைபட்டுக் குறுகிய தீர்வுகளை முன்மொழிபவர்களாகவே இருக்கின்றனர்.

'ஒரு வீட்டில் உருவாகும் கழிவுகளைத் தரம் பிரித்தல், ஆங்காங்கு மரங்களை நடுதல், நெகிழிப் பைகள் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்' ஆகியவற்றால் சுற்றுச்சூழலை மேம்படுத்திவிடலாம் போன்ற பிரச்சாரங்கள் எவ்வளவு மேம்போக்கானவை எனவும், அவை சூழலியல் பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணங்களில் இருந்து எப்படி விலகிச் செல்லவே உதவும் என்றும் புள்ளிவிவரங்களுடன் இந்நூல் வாதிடுகிறது.

"இதற்கு முன் வந்த மார்க்சியம் தொடர்பான நூல்கள் அறிவுஜீவிகள், ஆய்வாளர்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் மொழியில் எழுதப்பட்டது. அனால் இந்தத் தொகுப்பு உருவாகும் போதே அனைவரும் புரிந்து கொள்ளும் மொழியில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். அதற்குக் கடினமான உழைப்பும் நேரமும் தேவைப்பட்டது. பொதுவாக மார்க்சியம் என்றாலே புரிந்துகொள்வது கடினம்; நிறைய படித்தவர்களுக்கு தான் புரியும் என்ற மாயையை இந்த புத்தகம் உடைத்தெறியும்" என நம்பிக்கை தெரிவித்தனர் பதிப்பகத்தார்.

இந்நூல் விடியல் பதிப்பகம் ஸ்டால் எண் 585, 586-ல் கிடைக்கும். விலை: ரூ.500

(கட்டுரையாளர் : காயிதேமில்லத் - சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் பயிலும் மாணவர்)

சனி, 12 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon