மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா!

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா!

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா ஜனவரி 13 முதல் 15 வரை நடைபெறுகிறது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகப் பொள்ளாச்சி உள்ளது. பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, டாப் ஸிலிப், இந்திரா காந்தி வன விலங்குகள் சரணாலயம் மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகள் சுற்றுலா விரும்பிகளின் முக்கிய தளங்களாக உள்ளன. இப்பகுதியின் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகக் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 4 வருடங்களாகச் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் இந்தத் திருவிழாவானது இந்த ஆண்டு ஜனவரி 13 முதல் 15 வரையில் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

இந்த விழாவில் நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, போலாந்து, ஃபிரான்ஸ், அமெரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்கின்றனர். பொள்ளாச்சி சக்தி மில்ஸில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பலூன் திருவிழாவின் ஒரு பகுதியாக கலாச்சார நிகழ்வுகளும், இசை நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பங்கேற்பாளர்களைக் கவரும் விதமாகச் சிறந்த உணவு வகைகளும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளன. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெறுகின்றன.

கடந்த ஆண்டிலேயே சுமார் 50,000 பேர் வரை இந்த பலூன் திருவிழாவை கண்டு ரசித்த நிலையில் இந்த ஆண்டு இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக சர்வதேசத் தரத்துக்கு இணையாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பலூன் திருவிழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சனி, 12 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon