மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019

பேட்ட - விஸ்வாசம்: மதுரையில் கூடுதல் கட்டணம் புகார்!

பேட்ட - விஸ்வாசம்: மதுரையில் கூடுதல் கட்டணம் புகார்!

முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பல மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்கும் பேட்ட, விஸ்வாசம் படங்களின் டிக்கெட்டுகள் தமிழகம் முழுவதும் ஏரியாவைப் பொறுத்து பல்வேறு விலையில் விற்கப்படுகின்றன. இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் ஆய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்கள் 22 தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன. இந்தத் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மதுரையைச் சேர்ந்த மகேந்திர பாண்டி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று (ஜனவரி 11) நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சர்கார் திரைப்படத்துக்கு வசூலித்தது போல், ரஜினி நடித்த பேட்ட, அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் 22 தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு தியேட்டருக்கு 3 பேர் வீதம் வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆணையர்கள் கொண்ட குழு அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தக்குழு மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ஆய்வு நடத்தி, வரும் 18 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

சனி, 12 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon