மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019

பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்குத் தடை விதிக்க மறுப்பு!

பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்குத் தடை விதிக்க மறுப்பு!

3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜனவரி 11) உத்தரவிட்டுள்ளது

பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது,

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுக்கு மேல் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க முடியாது என்பதால், அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி சார்பாக அவரது வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில், தங்கள் தரப்புக்கு போதுமான அவகாசம் அளிக்கப்பட வில்லை, தங்களை முறையாக விசாரிக்க வில்லை, தாங்கள் கேட்ட ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை, இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்ட நிலையில், அங்கே வழக்கு நடைபெற்ற குறிப்பையும், வழக்கறிஞரின் முந்தைய வாதத்தையும் எங்கள் தரப்புக்கு அளிக்கவில்லை, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் தங்கள் தரப்புக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்த போது சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் மாலையில் தீர்ப்பு வழங்கியது, பாலகிருஷ்ண ரெட்டி குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தடை விதிக்க நீதிபதி பார்த்திபன் மறுப்பு தெரிவித்தார். 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்குத் தடை விதிக்கக் கோரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தார்.

மேலும் முந்தைய காலத்தில் சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டவர், தற்போது சட்டத்தை வகுக்கும் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகத் தண்டனைக்கு தடைவிதிக்க எப்படிக் கோர முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என வியப்பை வெளிப்படுத்தியுள்ளார் நீதிபதி.

பாரம்பரிய மதிப்புகள் வீழ்ச்சியடைந்து வரக்கூடிய நிலையில் பொதுவாழ்வில் புனிதர் இருக்கவேண்டுமென எதிர்பார்க்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளார்.

கட்சி தலைவர்களின் வழிகாட்டுதலின்படிதான் மக்கள் செயல்படுகிறார்கள் என்பதை அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர்களே வன்முறை, பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது என்பது உண்மையான மக்கள் பிரதிநிதிக்கான அடையாளம் இல்லை. சம்பவம் நடந்தபோது எம்.எல்.ஏ.-வும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரங்களை ஆராயாமல் இடைக்கால கோரிக்கையில் முடிவெடுப்பது சரியாக இருக்காது. விசாரணை செய்த சிறப்பு நீதிமன்ற உத்தரவில் முகாந்திரம் உள்ளது என்றும், குற்றச்சாட்டுத் தீவிரமானவை. அதனால் தண்டனையை நிறுத்திவைக்கவோ, தீர்ப்புக்குத் தடைவிதிக்கவோ முகாந்திரம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

பின்னர் பிரதான மேல்முறையீடு வழக்கை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

.

சனி, 12 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon