மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019

விஷ்ணு சிலைக்குத் தடை?

விஷ்ணு சிலைக்குத் தடை?

திருவண்ணாமலையில் இருந்து பிரம்மாண்ட விஷ்ணு சிலையைக் கர்நாடகாவுக்குக் கொண்டு செல்லத் தடை விதிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டதை ஏற்க மறுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 350 டன்எடையுள்ள விஷ்ணு பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. பெங்களூரு ஈஜிபுரா எனும் இடத்தில் இதனை நிறுவத்திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிலை கண்டெய்னர் லாரியில் பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த மாதம் 7ஆம்தேதியன்று கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து சிலையின் பயணம் தொடங்கியது. இந்த சிலையைக் கொண்டு செல்லும் இடமெல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. லாரியின் டயர் பஞ்சர் ஆகிவிட்டதால், தற்போது அதன் பயணம் தடைபட்டுள்ளது.

இந்நிலையில், இச்சிலையைக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்க வேண்டுமென வழக்கறிஞர் ரத்தினம் உயர் நீதிமன்றத்தின் முறையீடு செய்தார். நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று (ஜனவரி 11) இதனை விசாரித்தது. 350 டன் எடையுள்ள சிலையைக் கொண்டு செல்வதால் சாலைகள், வீடுகள் சேதமடைவதாகக் கூறப்பட்டது. இதற்காகச் சில புகைப்பட ஆதாரங்கள் மற்றும் செய்திதாள்களும் தாக்கல் செய்யப்பட்டது. அவற்றை முன்வைத்து, சிலையைக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் கூறினார் வழக்கறிஞர் ரத்தினம்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், “செய்தித்தாள் தகவலின்படி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது, உரிய முறையில் மனுவாகத் தாக்கல் செய்தால், வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

சனி, 12 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon