மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019

ஜெ. மரண விசாரணை: ஓபிஎஸ், தம்பிதுரைக்கு சம்மன்!

ஜெ. மரண விசாரணை: ஓபிஎஸ், தம்பிதுரைக்கு சம்மன்!

வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பிலிருந்து சந்தேகம் எழுப்பப்பட்டதையடுத்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அண்மைக் காலமாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதா வெளிநாடு சென்று சிகிச்சை பெற விரும்பவில்லை என்று லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறும் காணொளியும் வெளியாகியது.

இதற்கிடையே ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரிப்பதற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோருக்கு கடந்த மாதம் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் இருப்பதால் வேறொரு நாள் ஆஜராக வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் ஜனவரி 8ஆம் தேதியும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 7 தேதியும் ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் விசாரணை தள்ளிப்போனது.

இந்த நிலையில் வரும் 23ம் தேதி ஆஜராக வேண்டும் என துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நேற்று (ஜனவரி 11) விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜனவரி 22ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் எனவும் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மூவரும் ஆஜராகும் பட்சத்தில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக பல்வேறு கேள்விகளை ஆறுமுகசாமி ஆணையம் எழுப்ப உள்ளது. மேலும் சசிகலா தரப்பின் குறுக்கு விசாரணையும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 12 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon