மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019

தீப்பிடித்த பைக்: திகைத்த மாணவர்!

தீப்பிடித்த பைக்: திகைத்த மாணவர்!

சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததைக் கண்ட போக்குவரத்துக் காவலர், துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தார்.

நேற்று (ஜனவரி 11) சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தார் சுபாஷ் என்ற கல்லூரி மாணவர். வேளச்சேரியிலிருந்து செம்மஞ்சேரியில் உள்ள கல்லூரிக்கு, அவர் சென்று கொண்டிருந்தார். சோழிங்கநல்லூர் சிக்னலைக் கடந்தபோது, திடீரென்று அவரது இருச்சக்கர வாகனம் தீப்பிடித்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுபாஷ், உடனடியாக வாகனத்தில் இருந்து இறங்கினார்.

அந்த சாலையில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் பிரகாஷ், இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சித்தார். அருகிலுள்ள கடைகளில் தீயணைப்புக் கருவி இருக்கிறதா என்று கேட்டார். தான் ஓட்டிவந்த வாகனம் தீயில் எரிந்ததை, அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார் சுபாஷ்.

சில நிமிடங்களுக்குப்பின், அங்கிருந்த கடையொன்றில் இருந்த தீயணைப்புக் கருவியைக் கொண்டு தீயை அணைத்தார் பிரகாஷ். கடந்த ஆண்டு சோழிங்கநல்லூரில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்தபோது, மணல் போட்டு தீயை அணைத்தவர் காவலர் பிரகாஷ்.

இரு சக்கர வாகனத்தில் இருந்த பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டதே தீ விபத்துக்குக் காரணம் என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சனி, 12 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon