மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

கொடநாடு கொலையில் எடப்பாடி மீது சந்தேகம்: அன்றே சொன்ன மின்னம்பலம்; இன்று சொல்லும் மேத்யூஸ்

கொடநாடு கொலையில் எடப்பாடி மீது சந்தேகம்: அன்றே சொன்ன மின்னம்பலம்; இன்று சொல்லும் மேத்யூஸ்

ஜெயலலிதாவின் மரணம் மட்டுமல்ல... அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைகளிலும் மர்மம் நீடித்து வந்த நிலையில் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் அதிரடி தகவலுடன் வெளியிட்டுள்ள ஆதார வீடியோக்கள் அதிமுக வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளது.

பழனிசாமிக்கு 10 கேள்விகள்! என்ற தலைப்பில் கடந்த 4-5-2017 அன்று டிஜிட்டல் திண்ணையில் விரிவாக இதுபற்றி வெளியிட்டிருந்தோம். அந்த டிஜிட்டல் திண்ணை இதோ...

“மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். ஃபேஸ்புக்கில் நீண்டதொரு ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது. ”இங்கே நான் எதுவும் சொல்லப் போவது இல்லை. சில கேள்விகளை மட்டும் முன்வைக்கிறேன். பதில் சொல்ல வேண்டியவர் பழனிசாமிதான்!

1. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது கொடநாடு எஸ்டேட். அவர் உயிருடன் இருந்தவரை, போயஸ் கார்டனை தவிர அதிகம் தங்கிய இடம் என்றால் அது கொடநாடு எஸ்டேட்தான் . அப்படிப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ம் தேதி காவலாளி ஓம் பகதூர் மர்ம நபர்களால் கொல்லபட்டார். இன்னொரு காவலாளி கிருஷ்ண பகதூர் கொடூரமாக தாக்கப்பட்டார். அதன் பிறகு எஸ்டேட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் உள்ளே இருந்தவற்றை கொள்ளையடித்துச் சென்றது. இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க ஏன் இவ்வளவு தாமதம்?

2. ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் திடீரென விபத்தில் இறந்து போனார். இறப்பற்கு முன்பு சென்னைக்கு வந்தார் கனகராஜ். முக்கிய பிரமுகர் ஒருவரின் வாரிசை சந்தித்துப் பேசினார். எதற்காக அவரை சந்தித்தார் கனகராஜ். அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

3. ஏப்ரல் 20-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் எந்திரன் பட ஷூட்டிங் நடந்த ஸ்பாட்டுக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு ஓலா கால்டாக்சி நிறுவனத்தின் இன்னோவா காரில் அதிமுக பிரபலம் ஒருவரின் சகோதரரும், முன்னாள் அமைச்சர் ஒருவரும் காலை 10 மணிக்கு வந்தார்கள். மதியம் 1.10 வரை அவர்கள் உள்ளே இருந்தார்கள். அப்போது அங்கே கொலை செய்யப்பட்ட கார் டிரைவர் கனகராஜும், தற்போதைய மேற்கு மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரும் இருந்தார்கள். அவர்களுடன் வந்த இருவரும் பேசி இருக்கிறார்கள். எதற்காக வந்தார்கள்... என்ன பேசினார்கள்?

4. ஏப்ரல் 20ம் தேதி ஓலா கால் டாக்ஸி யார் பெயரில் புக் செய்யப்பட்டது? அந்த கால் டாக்சி எங்கிருந்து எங்கே போனது?

5.நட்சத்திர ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ளே வந்தவர்கள் யார்.. உள்ளே இருந்தவர்கள் யார் என்பதெல்லாம் பதிவாகி இருக்கிறது. அந்த பதிவுகளை காவல்துறை ஏன் இன்னும் கேட்டு வாங்கவில்லை.?

6. அதிமுக பிரபலத்தின் சகோதரர் அந்த ஹோட்டலில் இருந்து கிளம்பும் போது, டிரைவர் கனகராஜ் கையில் செய்திதாளில் சுற்றப்பட்ட ரூபாய் நோட்டுக் கட்டுக்களை கொடுத்திருக்கிறார். எதற்காக அந்த பணம் கனகராஜ்க்கு கொடுக்கப்பட்டது?

7. கொடநாடு எஸ்டேட்டில் உள்ள கம்போடுகள் தொடங்கி உள்ளே மர வேலைகள் அத்தனையும் செய்தவர் சஜின். இவர் கொடநாட்டுக்கு வரும்போதெல்லாம் உள்ளே அழைத்துச் செல்வது டிரைவர் கனகராஜ். கொள்ளை நடந்த சமயத்தில் சஜின் எங்கே இருந்தார். இப்போது அவர் அபுதாபிக்கு எதற்காக சென்றிருக்கிறார்?

8. கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஊழியர்களுக்கு ஜெயலலிதா அவர் படம் பொறித்த வாட்ச்களை பரிசாக வழங்குவார். இந்த வாட்ச்களின் மதிப்பு 2 ஆயிரம்தான். அந்த வாட்ச்கள் மட்டும்தான் காணாமல் போயிருப்பதாக போலீஸ் சொல்கிறது. இந்த வாட்ச்களை கொள்ளையடித்தான் கொள்ளை கும்பல் வந்ததா?

9. மூனாறு பகுதியில் 500 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட்டும், 200 ஏக்கர் செம்மர எஸ்டேட்டும் அதிமுக பிரமுகர் ஒருவர் வாங்கி இருந்தார். அதே போல இன்னொரு பிரமுகருக்கு ராமநாதபுரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் சொந்தமாகி இருந்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த முக்கிய பிரமுகர்களிடம் ஜெயலலிதா விசாரணை நடத்தினார். அந்த இடத்துக்கான டாகுமெண்ட்களை அவர்களிடம் வாங்கிக் கொண்டார். இதில் மூனாறு எஸ்டேட் மட்டும் கொடநாட்டில் மேனேஜராக இருக்கும் நடராஜன் பெயரில் மாற்றப்பட்டது. ஆனால், பத்திரப்பதிவு எதுவும் செய்யவில்லை. கொடநாடு எஸ்டேட்டுக்குள் இருந்த அந்த டாகுமெண்ட் இப்போது எங்கே இருக்கிறது?

10. கொடநாட்டில் கொள்ளையடிக்க வந்த கும்பலில் எல்லோரும் முகமூடி அணிந்திருக்கிறார்கள். அந்த கும்பலில் இருந்தவர்களில் ஒருவர் முகமூடியை விலக்கியபோது அவர் ஏற்கெனவே அந்த ஊழியர்களுக்கு பரிட்சையமானவர். அவர் இப்போது உயிருடன் இல்லை. இது சம்பந்தமாக காவல் துறை விசாரித்ததா?

இந்த பத்து கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதில் சொன்னாலே போதும். எல்லா சந்தேகங்களும் தீர்க்கபடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும். சொல்வாரா?” என்ற கேள்வியுடன் முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.“பார்க்கலாம்!” என்ற கமெண்ட்டை போட்டு ஷேர் செய்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

இதோ! இன்று தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைக்கான பின்னணி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு பேசினார். அப்போது, ’கொடநாட்டில் நடந்த கொலைக்கான பின்னணி தகவல்களை சேகரித்துள்ளேன். இதன் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடத்தியவர்களிடம் பேசிய ஆதாரங்களையும் வைத்துள்ளேன். எஸ்டேட்டில் உள்ள கட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆவணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றை கைப்பற்றவே இந்தக் கொள்ளை நடந்துள்ளது. இதில் எடப்பாடியின் சதி அடங்கி இருக்கிறது’’ என அவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளையில் ஈடுபட்ட சயோன் உள்ளிட்ட இருவரையும் செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி பேச வைத்தார் மேத்யூ. அப்போது பேசிய சயோன், ’’2017ல் ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சில ஆவணங்களை கேட்டு அனுப்பியதாக ஓட்டுநர் கனகராஜ் தெரிவித்தார். அதனை முதல்வரிடம் கொடுக்க வேண்டும் ஓட்டுநர் கனராஜ் என்னிடம் கேட்டார். கொடநாடு எஸ்டேட்டில் டிரைவராக இருந்த கனகராஜ் எனக்கு 5 ஆண்டுகளாக என்னிடம் பழகி வந்தார்.

அப்போது என்னை அனுகிய அவர், ’கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கியமான டாக்குமெண்டுகளை எடுக்க வேண்டும் முதல்வர் பழனிசாமி கேட்டுள்ளார். இதற்காக 5 கோடி ரூபாய் தருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கு எனக்கு உதவ வேண்டும்’ எனக் கேட்டார் கனகராஜ். அதன்படி நாங்கள் அந்த டாக்குமெண்டுகளை எடுக்க உதவுவதாக கூறினோம். இதற்காக கேரளாவில் இருந்து 10 பேரும், டிரைவர் கனகராஜும் எஸ்டேட்டுக்குள் நுழைந்தோம். அப்போது சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாது என கனகராஜ் கூறினார். இதை நம்பி எஸ்டேட்டுக்குள் நுழைய முயன்றபோது காவலாளி ஓம்பிரகாஷ் தடுத்தார். அவர் கூச்சல் போட்டு விடக்கூடாது என்பதற்காக கைகால்களைக் கட்டி வாயை மூடினோம். ஆனால் அவர் மூச்சு முட்டி இறந்து விட்டார். அவரை கொல்ல வேண்டும் என இதை செய்யவில்லை.

பின்னர் உள்ளே நுழைந்து கனகராஜ் கட்டடத்திற்குள் இருந்த முக்கிய ஆவணங்களை கனகராஜ் அள்ளி வந்தார். அதை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கப்போவதாக சொல்லிச் சென்ற அவர் அடுத்த 5 நாட்களில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதி பலியாகி விட்டார். நாகராஜ் கொல்லப்பட்டதில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருக்கிறது. ஆனால், எடப்பாடி கொடுப்பதாக சொன்ன அந்த 5 கோடி ரூபாய் பணம் எங்களுக்கு வந்து சேரவில்லை. பிறகு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றோம். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது’’ என அவர் தெரிவித்தார்.

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைக்கும், கொள்ளைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக வெளியாகி உள்ள இந்தத் தகவல்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சனி, 12 ஜன 2019

அடுத்ததுchevronRight icon