மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

மதுரை வரும் மோடிக்குக் கருப்புக் கொடி!

மதுரை வரும் மோடிக்குக் கருப்புக் கொடி!

முன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, ஜனவரி 27ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக 160க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இணைந்து திருச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டை நடத்தியிருந்தனர். இந்தக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை பத்திரிகையாளர்கள் சங்க அலுவலகக் கட்டடத்தில் இன்று (ஜனவரி 11) நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மோடி அரசின் முடிவு குறித்தும், அம்பேத்கர் பிறந்தநாளில் ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், “ஏற்கெனவே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டை டிசம்பர் 23ஆம் நாள் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். அதன் தொடர் செயல்திட்டமாக இந்திய அரசியல் சட்டத்தின் வரையறைகளுக்கு எதிராக, இட ஒதுக்கீட்டில் வராத ஜாதிகளுக்குப் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறார்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டிப்பதற்காக ஜனவரி 27ஆம் தேதி தேர்தல் பரப்புரையின் தொடக்கத்திற்கு மதுரைக்கு வரவிருக்கும் இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கிறது” என்றார்.

பெரியார் நினைவுநாளை ஒட்டி கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டது போல, அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி நீலச்சட்டை பேரணி மற்றும் ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்தப்போவதாகவும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து கொளத்தூர் மணி கூறுகையில், “இந்த நாட்டில் சமத்துவத்தைப் பேணும் முயற்சியில், இந்த நாட்டுக்கான அரசியல் சட்டத்தை வகுத்துக் கொடுத்த அறிவர் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளையொட்டி வருகிற ஏப்ரல் 7ஆம் நாள் மதுரையில் நீலச்சட்டை பேரணியையும், ஜாதி ஒழிப்பு மாநாட்டையும் நடத்துவதற்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது” என்றார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள பொழிலன், திருமுருகன் காந்தி, அரங்க குணசேகரன், கு.ராமகிருட்டிணன், நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon