மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

உத்தரவாதத்தை வாபஸ் பெற்ற ஜாக்டோ ஜியோ!

உத்தரவாதத்தை வாபஸ் பெற்ற ஜாக்டோ ஜியோ!

வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என்ற உத்தரவாதத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாடுகள் களையவேண்டும், 7ஆவது ஊதியக் குழுவின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது, இரண்டு முறை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 11) இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்திக் குழுவின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத்தரப்பில்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேலைநிறுத்தம்செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தது ஜாக்டோ ஜியோ தரப்பு.

“திட்டமிட்டபடிவரும் 22ஆம் தேதி முதல் ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுத் தரப்பு அவகாசம் மட்டுமே கோருகிறதே தவிர நடவடிக்கை எடுக்கவில்லை” என ஜாக்டோ ஜியோ அமைப்பு கூறியது.

அரசு காலதாமதம் செய்ததால் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்ற உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சித்திக் தலைமையிலான குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜனவரி 5ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்தஅறிக்கையின் அடிப்படையில் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என தமிழக அரசு உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon