மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

ஹர்திக் பாண்ட்யா: சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நீக்கம்!

ஹர்திக் பாண்ட்யா: சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நீக்கம்!

ஸ்டார் வேர்ல்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் கலந்துகொண்டு சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியது அவர்களது சொந்தக் கருத்து என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.

கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பான காபி வித் கரண் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து ஆபாசமான கருத்துகளை பாண்ட்யா பேசினார். அது பெரும் விவாதத்துக்குள்ளானது. இது போன்ற நிகழ்ச்சிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்குபெறுவது இது முதல் முறை. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பவும் பாண்ட்யா ட்விட்டர் மூலம் மன்னிப்பு தெரிவித்தார். இருப்பினும் இந்த விவகாரத்தில் பிசிசிஐ இரு வீரர்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இப்பிரச்சினையில் இருவரும் இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை (ஜனவரி 12) சிட்னியில் தொடங்குகிறது. இந்நிலையில் கேப்டன் விராட் கோலி இன்று (ஜனவரி 11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அவர்கள் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் சம்பந்தமில்லை. இந்த விஷயத்தில் அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை” என்று கூறினார்.

காபி வித் கரணின் 6ஆவது சீசனில் அதிக விமர்சனங்களைச் சந்தித்த இந்த நிகழ்ச்சியை இனி பார்க்க முடியாது. ஏனெனில் இந்த சீசனின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஹாட் ஸ்டார் தளத்தில் காணக்கிடைக்கின்றன. இந்த நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் பார்த்து வந்த நிலையில் தற்போது ஹாட் ஸ்டார் நிறுவனம் இதைத் தனது தளத்தில் இருந்து நீக்கியுள்ளது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon