மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

கோயம்பேட்டில் சிறப்பு வணிகத் திடல்!

கோயம்பேட்டில் சிறப்பு வணிகத் திடல்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்களை வாங்கிச் செல்ல ஏதுவாக சென்னை கோயம்பேட்டில் சிறப்பு வணிகத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கல், வருகிற 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கரும்பு, மஞ்சள், பூக்கள் மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். இதுபோன்ற பண்டிகைக் காலங்களில் சென்னை கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதும். பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் எவ்வித நெரிசலுமின்றி எளிதாகப் பொருட்களை வாங்கிச் செல்ல ஏதுவாக, சிறப்பு வணிகத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

மலர் சந்தை நுழைவு வாயிலில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தற்காலிக வணிகத் திடலில் குடிநீர், கழிப்பிடம் போன்ற தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொருட்களை ஏற்றிவரும் லாரிகளையும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும் இட வசதி வழங்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்யப் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகளும் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், கரும்பு உள்ளிட்ட பொருட்களை ஏற்றிவரும் லாரிகளுக்கு ரூ.2000 வரையில் டோக்கன் போடுவதாகவும், இதனால் தங்களது வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் சிறப்பு வணிகத் திடலுக்கு வந்துசெல்லும் பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க 044-24791133 என்ற புகார் எண் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon