மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

பிரதமர் மோடி, வாஜ்பாய் அல்ல: ஸ்டாலின்

பிரதமர் மோடி, வாஜ்பாய் அல்ல: ஸ்டாலின்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி, கடலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, அரக்கோணம் மக்களவைத் தொகுதி பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் நேற்று கலந்துரையாடிய பிரதமர் மோடி, பழைய நண்பர்களுக்கு கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து இன்று (ஜனவரி 11) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “பிரதமர் மோடி தன்னை முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவும், விநோதமாகவும் மட்டுமல்ல - வழக்கம் போல அவரது பிரச்சார யுக்தியாகவே இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு நிலையான ஆட்சி தேவை என்ற ஒரே உன்னத நோக்கத்திற்காக - பாஜகவும் இடம்பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கிய பிரதமர் வாஜ்பாயுடன் திமுக கூட்டணி வைத்தது. பிறகு மதவாதக்குரல்கள் எழுந்தவுடன் அக்கூட்டணியில் இருந்து துணிச்சலுடன் வெளியேறியதும் திமுக தான்” என்று தெரிவித்துள்ளார்.

“ஆனால் தற்போது பிரதமர் நரேந்திரமோடி வாஜ்பாயும் அல்ல - அவர் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வாஜ்பாய் உருவாக்கியது போன்றதொரு ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல. முன்பு எந்தப் பிரதமரும் ஆட்சி செய்த போது இல்லாத அளவிற்கு தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்தான் என்பதை தமிழக மக்கள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள்” என்று விமர்சித்துள்ள ஸ்டாலின்,

மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள் எல்லாம் தனக்கு வேண்டாத வார்த்தைகள் என்ற விபரீத மனப்பான்மையில் கடந்த நான்கரை ஆண்டுகாலமாக பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்றும் தனது அறிக்கையில் உறுதிபட தெரிவித்துள்ளார்.

திமுகவை யார் அழைத்தது? தமிழிசை

இதற்கு டெல்லியில் பதிலடி கொடுத்துள்ள பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “நம்மைத்தான் அழைக்கிறார்கள் என்று ஸ்டாலினாகவே நினைத்துக் கொள்கிறார். நண்பர்கள் என்று சொன்னதை, பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததை திமுக மறுக்க முடியாது. வாஜ்பாய் எவ்வளவு மதிக்கப்பட்டாரோ அந்தளவு பலம் வாய்ந்த தலைவராக மோடி இருக்கிறார். திமுகவை நாங்கள் அழைத்தது போல ஸ்டாலின் ஏன் பதறுகிறார் என்று தெரியவில்லை. ராகுல் காந்தியுடன் இணக்கமாக இருக்கும் திமுக, நாங்கள் அழைக்கிறோம் என ஏன் நினைக்க வேண்டும். ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து இதற்கு திமுகவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஸ்டாலின் கூறியதிலிருந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க அவருக்கு உள்ளுக்குள் ஆசை வந்துள்ளதோ என்று என்னத் தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon