மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

புத்தகக் காட்சி 2019: சிற்பங்களால் ஈர்க்கும் அரங்கு!

புத்தகக் காட்சி 2019: சிற்பங்களால் ஈர்க்கும் அரங்கு!

பியர்சன் லினேக்கர். ச.ரெ

வாசகர்கள் பலரும் அந்தப் புத்தக அரங்குக்கு நுழைவதற்கு காரணமே அங்கே வரிசையாகவும் நேர்த்தியாகவும் அடுக்கிவைக்கப்பட்ட சிற்பங்கள்தான்.

இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் மக்களை ஈர்த்த வித்தியாசமான அரங்குகளில் ஒன்று, 'நீலம்' பண்பாட்டு மையத்தின் புத்தக அரங்கு.

முகப்புப் பகுதியை ஒரு நுழைவாயிலின் வடிவில் அமைத்துள்ளனர். அதன் மையப்பகுதியில் அம்பேத்கரின் சிற்பம், வலது புறத்தில் வழக்கறிஞர் உடையில் தன் நெஞ்சோடு அணைத்தபடி சாதியை ஒழித்தல் (Annihilation of Caste) புத்தகத்தை அம்பேத்கர் வைத்திருக்கும் ஒரு டிஜிட்டல் போர்ட் ஆகியவற்றைக் காணலாம். வாயிலின் முகப்பில் 'நான் இந்துவாக சாக மாட்டேன்' என்ற அவரது புத்தகத்தின் அட்டைப் படமும் தென்பட்டது. குறிப்பாக அங்கு பறை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சமீபத்தில் நடந்து முடிந்த 'வானம்' கலைத் திருவிழாவின் நந்தாவிளக்குப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தலித் மக்களின் சமூக அரசியல் பண்பாட்டு விடுதலைக்குப் பல்வேறு தளங்களில் போராடிய தலைவர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரின் சிற்பங்கள், அரங்கின் மேலடுக்கில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தது.

"வெளியிலிருந்து பார்க்கும் எவருக்கும் உள்ளே சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று தோன்றாமல் இருக்காது" என்றார் நீலம் பண்பாட்டு மையத்தில் பணிபுரியும் ராஜா.

"இந்தச் சிற்பங்கள்தான் என்னை உள்ளே வர ஈர்த்தன. பொறுமையாக ஒவ்வொருவரின் சிற்பத்தையும் அதனடியில் இருக்கும் பெயரையும் பார்த்து முடித்தேன். அதிலிருக்கும் நிறைய பேரை எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்கள் என்று அருகில் இருந்தவர்களிடமிருந்து அறிந்து கொண்டேன். மேலும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இவ்வரங்கு எனக்குள் விதைத்துள்ளது" என்றார் மாணவர் விஜய்.

சாதி ஒழிப்பை மையமாகக் கொண்ட பல நூல்கள் இவ்வரங்கில் காணக் கிடைக்கின்றன. அம்பேத்கரின் எழுத்துகள், இந்துத்துவத்தை அலசி அதன் அரசியலை எதிர்கொள்ளும் நூல்கள், தலித் இலக்கியம், பௌத்தம் தொடர்பான நூல்கள், சமூகம் - அரசியல் - வரலாறு - சினிமா எனப் பல்வேறு தளங்களை அறிமுகப்படுத்தி உரையாடலை நிகழ்த்தும் நூல்கள் என இவ்வரங்கின் நூல்கள் அமைந்துள்ளன. அரங்கு எண் 535, 536.

(கட்டுரையாளர் : காயிதேமில்லத் - சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் பயிலும் மாணவர்)

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon