மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

டூ லெட்: வாழ்க்கைக்கு நெருக்கமான படம்!

டூ லெட்: வாழ்க்கைக்கு நெருக்கமான படம்!

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள முதல் படம் டூ லெட். இத்திரைப்படம் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. தேசிய விருது உட்பட 31 விருதுகளை வென்றுள்ளது. ஒரு ஆண்டுக்கும் மேலாகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வந்த இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஐடி துறை வளர்ச்சியடைந்த பின் வீட்டு வாடகை அதிகரிக்கத் தொடங்கியது. சாதாரண மக்களால் அதிக வாடகை கொடுக்க முடியாததால் வீடு கிடைப்பது பிரச்சினைக்குள்ளானது. இதை மையமாகக் கொண்டு செழியன் டூ லெட் படத்தை இயக்கியுள்ளார். செழியனிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சந்தோஷ் நம்பிராஜன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிப்ரவரி மாதம் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசரில் உலகம் முழுவதும் கவனம் பெற்ற ஈரான் இயக்குநர் அஸ்கர் ஃபர்கதி டூ லெட் படத்தை பாராட்டிப் பேசியுள்ளார்.

“டூ லெட் திரைப்படத்தை நாங்கள் பார்த்தோம். இது உண்மையான திரைப்படம். வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக உள்ளது. படம் எடுத்துக்கொண்ட கருப்பொருளும் நடிப்பும் சிறப்பாக இருந்தது” என்று கூறியுள்ளார். சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை அஸ்கர் ஃபர்கதி இரு முறை பெற்றுள்ளார்.

‘ழ’ சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

டூ லெட் - டீசர்

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon