மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

கள்ளக்குறிச்சி: எடப்பாடியின் ‘உடையார்’ கணக்கு!

கள்ளக்குறிச்சி: எடப்பாடியின் ‘உடையார்’ கணக்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டதில் தமிழக முதல்வரின் அரசியல் ரீதியான கணக்குகளும் இருக்கின்றன என்பதே இந்த வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது. இந்தக் கணக்குகளின் மைய இழையே உடையார் சமுதாயத்தினர்தான். சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில்தான் தமிழகத்திலேயே உடையார் சமுதாயத்தினர் அடர்த்தியாக வசிக்கிறார்கள்.

அண்மைக் காலங்களில் அடிக்கடி சேலம் பக்கம் வந்து செல்லும்போது சேலம், அக்கம்பக்க மாவட்டங்களின் அதிமுக நிலவரம் எப்படி இருக்கிறது என்று ரிப்போர்ட் கேட்பது அவர் வழக்கம். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் முதல்வருக்குக் கிடைத்த ஒரு தகவல் அவரை யோசிக்க வைத்தது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி, ஏத்தாப்பூர், ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி, மல்லியகரை, சீலியம்பட்டி, தாண்டவராயபுரம் (ஐஜேக நிறுவனர் பாரிவேந்தரின் தாயாருடைய ஊர்) உள்ளிட்ட பகுதிகளிலும்...

விழுப்புரத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை தியாகதுருகம் போன்ற பகுதிகளிலும் அதிமுகவில் இருந்த பெரும்பாலான உடையார் சமூதாயத்தினர் தினகரன் பின்னால் அணிவகுக்கிறார்கள் என்பதுதான் முதல்வருக்கு கிடைத்த முக்கியமான அந்த செய்தி.

இப்பகுதிகளில் திமுக, காங்கிரஸ் கட்சிகளில் கூட உடையார் சமுதாயத்தினர் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். அதேநேரம் அதிமுகவில் இருந்து கிளைச் செயலாளர் முதல்வர் இன்னும் சில படிகளில் இருக்கும் உடையார் சமுதாய நிர்வாகிகள் தினகரன் பின்னால் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தது.

அவர்களை சரிக்கட்ட என்ன செய்யலாம் என்று ஆலோசித்தார் முதல்வர். அப்போதுதான் நெடுநாட்களாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் கிடப்பதை முதல்வரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் அவரது நண்பரும், உளுந்தூர் பேட்டை எம்,.எல்.ஏ.வும், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளருமான குமரகுரு. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனரான பாரிவேந்தர் நெடுநாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்து வருகிறார் என்ற தகவல்கள் எல்லாம் முதல்வர் முன் வைக்கப்பட்டன.

“எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்ட அதிமுகவில் வளர்ந்துவந்தபோது அவருக்கு கட்சியில் வன்னியர் சமுதாய பிரமுகர்கள் எதிராக இருந்தபோது உடையார் சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள்தான் உதவியிருக்கிறார்கள். ஆனால் நாளடைவில் மாவட்டச் செயலாளர், மந்திரி என்று ஆன பிறகு எடப்பாடி இந்த சமுதாயத்தை மறந்துவிட்டார். இது இந்த சமுதாயப் பிரமுகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அதிமுகவில் பிளவு வந்து எடப்பாடியை டிடிவி தினகரன் எதிர்க்க ஆரம்பித்தபோது இவர்கள் அனைவரும் எடப்பாடி

எதிர்ப்பு என்ற அளவில் தினகரன் பின்னால் சென்றுவிட்டனர். சேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்ன சேலம் என்று இந்தப் பக்கம் பரவலாக அதிமுக உடையார் சமுதாயத்தினர் தினகரன் பின்னால் அணிவகுத்தனர். அவர்களை எல்லாம் தன்னை நோக்கித் திரும்ப வைக்கும் ஒரு முயற்சியாகத்தான் இதை செய்திருக்கிறார் எடப்பாடி” என்கிறார் ஏத்தாப்பூரில் நம்மிடம் பேசிய ஒரு தினகரன் ஆதரவு அதிமுக பிரமுகர்.

ஆக தன்னை விட்டுப் போன தினகரனிடம் சென்றவர்களை வளைக்கவும், ஜி.கே.வாசன், பாரிவேந்தர் போன்ற தலைவர்களுடன் அரசியல் ரீதியாக உறவுக் கதவுகளைத் திறக்கவும், பாமக நிறுவனரின் அடுத்த கட்ட கோரிக்கைகளுக்காக அவர் தன்னை நோக்கி நெருங்கி வரவும் இப்படி பல கணக்குகளை கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் என்ற ஒரே அறிவிப்பின் மூலம் தீர்க்கப் பார்க்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லைகள் என்ன என்ற வரையறைப் பணி நடந்துகொண்டிருக்கும் நிலையில் அது முடிந்த பிறகுதான், எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கணக்குகள் பலன் அளிக்குமா, பல் இளிக்குமா என்று தெரியும்!

ஒரு மாவட்டம் உருவாவதில் எத்தனை அரசியல்!

-ஆரா

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon