மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 24 பிப் 2020

அவனியாபுரம்: ஜல்லிக்கட்டு குழு அமைப்பு!

அவனியாபுரம்: ஜல்லிக்கட்டு குழு அமைப்பு!

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவையும், ஊர் மக்கள் 16 பேர் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது குறித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு, வரும் ஜனவரி 15ஆம் தேதியன்று மதுரை அவனியாபுரத்தில் போட்டி நடத்தப்படும் என்று அறிவித்தது. இதனை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால், அவனியாபுரத்தில் 17 சமுதாயங்களைச் சார்ந்த மக்கள் வசிப்பதாகவும், குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் இடம்பெறுவதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தத் தேவையான பாதுகாப்பை காவல் துறை வழங்க வேண்டுமென்று கோரி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். இதனை எதிர்த்துப் பலரும் மனுதாக்கல் செய்தனர்.

மனுதாரர் கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி விழாக் குழுவில் இருந்து வருவதாகவும், இதுவரை முறையாக கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்கவில்லை எனவும் எதிர்தரப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அவனியாபுரத்திலுள்ள அனைத்து சமூகத்தினரையும் விழாக் குழுவில் சேர்க்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அனைத்து சமூகத்தினரும் ஒருங்கிணைந்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டுமென்றும், தேவைப்பட்டால் உயர் நீதிமன்றமே குழுவை அமைக்கும் என்றும், இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் தெரிவித்தது. ஒற்றுமை ஏற்படாவிடில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.

இன்று (ஜனவரி 11) மதியம் 1 மணியளவில், நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அவனியாபுரத்தில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த 16 பேரின் பட்டியல் வழங்கப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் 3 வழக்கறிஞர்கள் கொண்ட ஒரு தலைமைக் குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.

“அவனியாபுரம் கிராம மக்கள் கொண்ட 16 பேர் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாகச் செயல்படுவர். ஜல்லிக்கட்டுக்குத் தேவையான நிதியை 16 உறுப்பினர்கள் தனியாகச் சென்று எங்கும் வசூல் செய்யக்கூடாது. ரசீது புத்தகங்கள் நீதிபதி அடங்கிய நால்வர் குழுவிடம் இருக்கும். அவர்கள் முன்னிலையில் நிதி வசூல் நடைபெற வேண்டும். வங்கிக் கணக்கில் இது தொடர்பான விவரங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட விதம், வரவு செலவுகள் உள்ளிட்ட விவரங்களை முறையாக வீடியோ பதிவு செய்து, வரும் 21ஆம் தேதியன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் யாருக்கும் முதல் மரியாதை தரக்கூடாது என்று அறிவுறுத்தினர். விழாக் குழுவை அமைக்க மாவட்ட நிர்வாகம் தவறியதாலேயே நீதிமன்றம் இதில் தலையிட வேண்டியதாகிவிட்டது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதன் மூலமாக, வரும் ஜனவரி 15ஆம் தேதியன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தத் தடை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon