மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

ஆடி கார்கள் விற்பனை சரிவு!

ஆடி கார்கள் விற்பனை சரிவு!

2018ஆம் ஆண்டில் ஆடி கார்கள் விற்பனை 18 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல ஆடம்பரக் கார்கள் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் 2007ஆம் ஆண்டில் தனது கிளையைத் தொடங்கி தொடர்ந்து இயங்கி வருகிறது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் இந்தியாவில் ஏ3, ஏ4, ஏ6, கியூ3, கியூ5 மற்றும் கியூ7 ஆகிய கார்களை அசெம்பிளிங் செய்து விற்பனை செய்கிறது. மேலும், இறக்குமதி செய்யும் சில கார்களையும் இங்கு விற்பனை செய்கிறது. இந்தியர்களுக்கு ஆடி கார்கள் மீது உள்ள மோகம் 2018ஆம் ஆண்டில் குறைந்துவிட்டதென்றே கூறலாம். 2018ஆம் ஆண்டில் வெறும் 6,463 கார்களை மட்டுமே விற்பனை செய்து 18 சதவிகித வீழ்ச்சியை அந்நிறுவனம் சந்தித்துள்ளது.

2017ஆம் ஆண்டில் மொத்தம் 7,876 ஆடி கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டில் ஏ8 மற்றும் ஆர்8 ஆகிய இரண்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதாகவும், வருவாய் ஈட்டுவதில் அதிகக் கவனம் செலுத்தப்போவதாகவும் ஆடி இந்தியா நிறுவனத் தலைவரான ராஹில் அன்சாரி,பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆடி நிறுவனம் விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ள அதேவேளையில், அதன் போட்டி நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், 1.4 சதவிகித விற்பனை உயர்வைப் பதிவுசெய்துள்ளது. 2018ஆம் ஆண்டில் மொத்தம் 15,538 பென்ஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டில் விற்பனையான பென்ஸ் கார்களின் எண்ணிக்கை 15,330.

பி.எம்.டபிள்யூ நிறுவனம் 11,105 கார்களையும், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 4,596 கார்களையும், வால்வோ ஆட்டோ நிறுவனம் 2,638 கார்களையும் 2018ஆம் ஆண்டில் விற்பனை செய்துள்ளன.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon