மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 4 ஆக 2020

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு!

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு!

தானாக எந்த பொருளும் வேண்டாம் என குறிப்பிட்ட, NPHH - NC என சொல்லப்படும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளை (41,106) தவிர மீதம் உள்ள அனைவருக்கும் தமிழக அரசின் பொங்கல் பரிசு 1000 ரூபாயை வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வரும், பொங்கல் பரிசு 1000 ரூபாயை தடை விதிக்கக் கோரி, கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், மிகவும் பின் தங்கியவர்கள், நடுத்தர நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் பொங்கல் பொருட்களுடன் சேர்த்து 1000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும், சர்க்கரை குடும்ப அட்டைகள் என சொல்லப்படும், அரிசி தவிர பிற அத்தியாவசிய பொருட்களை மட்டும் பெற்று வருபவர்களுக்கும், எந்தப் பொருட்களும் தங்களுக்கு வேண்டாம் என விண்ணப்பம் செய்தவர்களுக்கும் தமிழக அரசு வழங்கும் 1000 ரூபாய் பணத்தை வழங்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த, உத்தரவின் விளைவாக, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் முன்னுரிமை அடிப்படையில் பெறும் PHH என சொல்லப்படும் தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 76,99,940. மத்திய, மாநில அரசின் உதவியுடன் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களும் முன்னுரிமை அடிப்படையில் பெறும் PHH - AAY என்னும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 18,64,600. மாநில அரசின் நிதி உதவியுடன் மட்டும் அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் பெறும் NPHH எனும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 90,08,842 . இந்த மூன்று வகையான , குடும்ப அட்டை தாரர்களை (1, 85,73,382 ) தவிர மீதம் உள்ள, மாநில அரசின் நிதி உதவியுடன் அரிசி தவிர்த்து அத்தியாவசிய பொருட்களை பெறும் NPHH - S எனும் சர்க்கரை குடும்ப (10, 11,330) அட்டைகளுக்கும், எந்தப் பொருளும் இல்லாத முன்னுரிமையற்ற NPHH - NC எனும் குடும்ப (41,106) அட்டைகளுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது,

இந்நிலையில், இந்த தடை உத்தரவை மாற்றியமைக்கக் கோரி தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா சார்பில் நேற்று (ஜனவரி 10) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

எந்தப் பொருளும் வேண்டாம் என்ற 41,106 அட்டைகளுக்குப் பொங்கல் பரிசு வழங்க வேண்டாம் என்ற உத்தரவைப் பின்பற்ற தயாராக உள்ளதாகவும், அதே நேரத்தில்,

மாநில அரசின் நிதி உதவியுடன் அரிசி தவிர்த்து அத்தியாவசிய பொருட்களை பெறும் (10, 11, 330) சர்க்கரை குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் 1000 வழங்க அனுமதிக்க வேண்டும், ஏன் எனில் அவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் எனவும், மொத்தமுள்ள 10 ,11,330 அட்டைதாரர்களில், கடந்த 9ஆம் தேதி வரை 4,12,558 அட்டைதாரர்கள் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு பெற்று விட்டதால், மீதமுள்ளவர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது, அவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதிக்கும் வகையில், தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டது,

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று (NPHH-S) சர்க்கரை குடும்ப அட்டைகள் என சொல்லப்படும் 10,11,330 அட்டைகளுக்கு, பொங்கல் பரிசு ரூபாய் 1000 வழங்க ஒப்புதல் தெரிவித்து பழைய உத்தரவை மாற்றி அமைத்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பொங்கல் பரிசு தொடர்பான வழக்கின் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து யாராவது மேல்முறையீடு செய்தால், தமிழக அரசு தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon