மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

தமிழக அரசுக்கு வேதாந்தா கடிதம்!

தமிழக அரசுக்கு வேதாந்தா கடிதம்!

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி தர வேண்டுமென தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. ஆய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சில நிபந்தனைகளுடன் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

இதையடுத்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் ஆலையைத் திறக்கத் தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு ஆகிய இரண்டையும் உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அதில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என்றும், நிபந்தனைகளை மூன்று வாரத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு 2 கோரிக்கை மனுக்கள் அடங்கிய கடிதத்தை வேதாந்தா நிறுவனம் அனுப்பியுள்ளது. “தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த 25 வழிமுறை மற்றும் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு, ஆலைக்குள் செல்ல அனுமதி தேவை. ஆலைக்கு வைக்கப்பட்டுள்ள சீலை தமிழக அரசு உடனடியாக அகற்ற வேண்டும். எங்கள் நிறுவனத்திற்கு உடனடியாக மின்சார இணைப்பை வழங்க வேண்டும். தீர்ப்பாய உத்தரவின்படி, ஜனவரி 5ஆம் தேதியே வேதாந்தா நிறுவனத்திற்கு போடப்பட்டுள்ள சீல் அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னும் அகற்றப்படவில்லை” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட ஆலோசனை பெறுவதற்காக, இந்த 2 மனுக்களையும் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon