மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

பத்திரிகையாளர்களுக்கு ஏழு ஆண்டு சிறை!

பத்திரிகையாளர்களுக்கு ஏழு ஆண்டு சிறை!

மியான்மர் நாட்டில் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தை மீறியதற்காக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இருவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்கள் இருவரும் குற்றமற்றவர்கள் என நிரூபிப்பதற்கு போதிய சாட்சிகள் இல்லாததால் அவர்களது மேல்முறையீட்டு மனுவை மியான்மர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வா லோன், கியாவ் சோ ஆகிய இரு பத்திரிகையாளர்களுக்கும், கடந்த செப்டம்பர் மாதம் மியான்மர் நாட்டிலுள்ள ஒரு கீழமை நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 10 ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை இவர்கள் இருவரும் ஆய்வு செய்து வந்தனர். இதனால், இருவரும் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கில், இரண்டு பத்திரிகையாளர்களுக்கும் அளிக்கப்பட்ட தீர்ப்பு மிகச்சரியானது என்று உயர் நீதிமன்ற நீதிபதி அவுங் நய்ங் தெரிவித்துள்ளார்.

இரு பத்திரிகையாளர்களும் ரகசியத் தகவல்களைச் சேகரித்து, மியான்மர் நாட்டின் எதிரிகளுக்கு அனுப்பியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர் நீதிமன்ற நீதிபதி, இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 19ஆம் தேதியன்று, இரு பத்திரிகையாளர்களுக்கும் மன்னிப்பு வழங்கி மியான்மர் அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon