மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

சென்னை சில்க்ஸ்: உச்ச நீதிமன்றம் அனுமதி!

சென்னை சில்க்ஸ்: உச்ச நீதிமன்றம் அனுமதி!

தீ விபத்தில் சிக்கி சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், அங்கு மீண்டும் கட்டடம் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2017ஆம் ஆண்டு மே மாதம் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபலமான ஜவுளிக்கடைகளில் ஒன்றான சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டடத்தின் 9வது தளம் முழுவதும் தீக்கிரையானது. இதனால், கட்டடம் முற்றிலுமாக இடிக்கப்பட்டது. மீண்டும் கட்டடம் கட்ட தமிழக அரசிடம் அனுமதி கோரியது சென்னை சில்க்ஸ் நிர்வாகம். அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.

இதற்கிடையில், சிஎம்டிஏ விதிகளுக்கு எதிராக சென்னை சில்க்ஸ் புதிய கட்டடத்தைக் கட்டி வருவதாகச் சென்னையை சேர்ந்த கண்ணன் பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை இன்று (ஜனவரி 11) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது.

சென்னை சில்க்ஸ் கட்டடம் விதிகளை மீறிக் கட்டப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. சென்னை சில்க்ஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன், உரிய அனுமதி பெற்ற பின்னரே கட்டடம் கட்டப்படுவதாகக் கூறினார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது; கட்டடத்தைக் கட்டுவதற்கும் அனுமதி வழங்கியது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon