மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா

ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா

சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து தீயணைப்பு துறை தலைவராக மாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா அந்த பொறுப்பை ஏற்க மறுத்து தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இரு தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் அலோக் வர்மாவை பணியில் அமர்த்த உத்தரவிட்டதை அடுத்து, மீண்டும் சிபிஐ இயக்குநராக பதவி ஏற்றார். எனினும், பிரதமர் மோடி, நீதிபதி ஏ.கே,சிக்ரி, எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அடங்கிய உயர்மட்ட குழு அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கியது.

தன் மீது ஆதாரமற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய அலோக் வர்மா இன்று (ஜனவரி 11) தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்,

அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்த உயர்மட்ட குழு, அவரை தீயணைப்புத் துறை, குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல்படை இயக்குநராக நியமனம் செய்தது. இந்தப் பதவியை ஏற்க மறுத்த அலோக் வர்மா, இந்த பதவிக்கான ஓய்வு பெறும் வயது வரம்பை கடந்த 2017 ஜுலை 31ஆம் தேதியே தான் கடந்துவிட்டதாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தை பணியாளர் மற்றும் பயிற்சி துறை செயலாளர் சந்திரமவுலிக்கு அனுப்பியுள்ளார். சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து தம்மை நீக்கும் முன்னர் தம்மிடம் விளக்கம் எதுவும் கேட்கப்படவில்லை என்றும், தமக்கு இயற்கை நீதி வழங்கப்படவில்லை என்றும் அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

அந்தமான் நிக்கோபர், புதுச்சேரி, டெல்லி ஆகிய இடங்களில் பல துறைகளில் பணியாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அலோக் வர்மா தனக்கு விலைமதிப்பற்ற ஆதரவு கிடைத்ததால் பல்வேறு சாதனைகளை அடைய முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் இன்று (ஜனவரி 11) மீண்டும் பொறுப்பேற்றார்.

அஸ்தானாவுக்கும் நெருக்கடி

தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ராகேஷ் அஸ்தனாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சதிஷ் பாபு சனாவையும் சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இருந்து தன் பெயரை நீக்க, சதிஷ், ராகேஷ் அஸ்தனாவுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் அஸ்தனா மற்றும் சிபிஐ எஸ்.பி. தேவேந்திர குமார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இதை ரத்து செய்ய கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, நஜ்மி வஸிரி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, அஸ்தனா கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கியுள்ளார். இதனால் அவர் விசாரணைக்காக எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon