சர்வதேச பெண்கள் குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மேரி கோம் முதலிடம் பிடித்துள்ளார்.
சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் நேற்று (ஜனவரி 10) வெளியிட்டுள்ள பட்டியலில், பெண்களுக்கான 45 முதல் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் 1,700 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மேரி கோம் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். 36 வயது நிரம்பிய மேரி கோமுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை 6 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இதற்கு முன்பு கியூபாவின் பெலிக்ஸ் சாவோனைத் தவிர வேறு யாரும் 6 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றதில்லை. இறுதியாகக் கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அந்தப் போட்டியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஹானா ஒகோடாவை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் மேரி கோம்.
ஹானா ஒகோடா 1,100 புள்ளிகளுடன் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளார். மேரி கோம் இதற்கு முன்பு 2002, 2005, 2006, 2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதேபோல 2012ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். பெண்கள் குத்துச்சண்டைப் போட்டிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்தியப் பெண் மேரி கோம்தான்.
2020ஆம் ஆண்டில் ஜப்பானில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் மேரி கோம் இணைக்கப்படாததால், 51 கிலோ எடைப் பிரிவில் மேரி கோம் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. சர்வதேச பெண்கள் குத்துச் சண்டை தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தவரையில் இந்தியாவின் 51 கிலோ எடைப்பிரிவில் பிங்கி ஜாங்க்ரா 8ஆவது இடத்தையும், 57 கிலோ எடைப் பிரிவில் சோனியா லாதெர் 2ஆவது இடத்தையும், 64 கிலோ எடைப்பிரிவில் சிம்ரன்ஜித் கவுர் 4ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.