மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

செலவைக் குறைக்கும் நீர்வழிப் போக்குவரத்து!

செலவைக் குறைக்கும் நீர்வழிப் போக்குவரத்து!

நீர்வழிப் போக்குவரத்தால் இந்தியாவில் லாஜிஸ்டிக் செலவுகள் 4 சதவிகிதம் வரையில் குறையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்திய கண்டெய்னர் கார்பரேஷன் நிறுவனம் தனது முதல் நீர்வழிப் போக்குவரத்துச் சேவையைத் தொடங்கியுள்ளது. காண்ட்லா துறைமுகத்திலிருந்து மங்களூரு மற்றும் கொச்சின் வழியாக தூத்துக்குடித் துறைமுகத்துக்குச் செல்லும் இந்த நீர்வழிப் போக்குவரத்துச் சேவையை ஜனவரி 10ஆம் தேதி மத்திய கப்பல் துறை அமைச்சரான நிதின் கட்கரி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வீடியோ கான்ஃபெரன்சிங் வழியாகப் பேசிய அவர், “கங்கை நதி வழியாக சரக்குக் கப்பல்களை இயக்கும் எனது கனவை முன்பு நான் கூறியபோது அதைக் கேலி செய்தார்கள். ஆனால் அக்கனவு இப்போது நனவாகி வருகிறது.

நம்மால் இப்போது வாரணாசி வழியாக மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு நீர்வழிப் போக்குவரத்தில் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய முடியும். லாஜிஸ்டிக் செலவுகளை நாம் 4 சதவிகிதம் வரையில் குறைத்தோமேயானால், ஏற்றுமதி வர்த்தகம் 25 முதல் 30 சதவிகிதம் வரையில் உயரும். இதைச் செய்து முடிப்பதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளது. உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக நாம் இருக்கிறோம். சீனாவின் ஒட்டுமொத்த சரக்குப் போக்குவரத்தில் கடற்கரை வழிப் போக்குவரத்துச் சேவையின் பங்கு 24 சதவிகிதமாக இருக்கிறது. இதன் பங்கு ஜெர்மனியில் 11 சதவிகிதமாகவும், அமெரிக்காவில் 9 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இதன் பங்கு வெறும் 5 சதவிகிதம் மட்டுமே. இதில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

இந்த ஆண்டில் மட்டும் 80 லட்சம் டன் அளவிலான சரக்குகள் கங்கை நதி வழியாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் கட்கரி கூறினார்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon