மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

இந்து முன்னணியினர் – ஊர் மக்கள் மோதல்!

இந்து முன்னணியினர் – ஊர் மக்கள் மோதல்!

திருப்பூர் மாவட்டம் ஊதியூரில் ஹட்சன் நிறுவன ஆலை அமையவுள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்ற புகார் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில், இந்து முன்னணியினர் மற்றும் ஊர் மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. தடியடி நடத்தி இந்த கூட்டத்தைக் கலைத்தனர் போலீசார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள ஊதியூரில் உள்ளது உத்தண்ட வேலாயுதசாமி கோயில். இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 1,200 ஏக்கர் நிலம் உள்ளது. 2017ஆம் ஆண்டு குண்டடம் சாலை கருக்கம்பாளையம் பிரிவு அருகே பால் பதப்படுத்தும் ஆலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியது ஹட்சன் பால்பொருட்கள் நிறுவனம். இந்நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் பலகை வைத்தனர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள். இது தொடர்பாக, இந்து முன்னணியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், சமீபநாட்களாக இப்பகுதியில் மீண்டும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதாகத் தகவல் வெளியானது.

நேற்று (ஜனவரி 10) காலை 10 மணியளவில் கோயில் நிலத்தை ஹட்சன் நிறுவனத்திடம் இருந்து மீட்க வலியுறுத்தி ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோயிலில் வழிபாடு நடத்தப் போவதாகத் தெரிவித்தனர் இந்து முன்னணி நிர்வாகிகள். அதே நேரத்தில், ஆலைப் பணிகள் தொடர வேண்டுமென்று கூறி மலையடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் வழிபாடு செய்வதாக அறிவித்தனர் ஊதியூர் பொதுமக்கள். இரு தரப்புக்கும் இடையே அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

காவல் துறை கட்டுப்பாட்டையும் மீறி, நேற்று காலையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த கார் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த, போலீசார் தடியடி மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, சுமார் 100 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் காவல் கண்காணிப்பாளர் கயல்விழி விசாரணை நடத்தியுள்ளார்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon