மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

கொலை வழக்கில் ராம் ரஹீமுக்கு தண்டனை!

கொலை வழக்கில் ராம் ரஹீமுக்கு தண்டனை!

பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் குர்மித் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவராக இருந்துவந்தவர் குர்மித் ராம் ரஹீம் சிங். சிர்ஸாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கி வந்தது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இவரைக் கடவுளாக எண்ணி வணங்கி வந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இவர் புகழ் பெற்றிருந்தார். இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாக, 1999ஆம் ஆண்டில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில், 2017ஆம் ஆண்டில் இவருக்கு 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து, ரோஹ்தக் சுனாரியா சிறையில் குர்மித் ராம் அடைக்கப்பட்டார்.

2002ஆம் ஆண்டு பூரா ஸச் என்ற பத்திரிகை உரிமையாளர் ராம்சந்தர் சத்ரபதி, குர்மித் சிங் குறித்த கட்டுரையொன்றை வெளியிட்டார். அதில் அந்த இரண்டு பெண்களும் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானது எப்படி என்று விவரிக்கப்பட்டது. இதையடுத்து, ராம்சந்தர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு உதவியதாகக் கூறி, தேராவில் பணியாற்றிய ரஞ்சித் சிங் என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். குர்மித் சிங் உத்தரவின் பேரில் இந்த கொலை நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது; குல்தீப், நிர்மல், கிரிஷன்லால் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். 2002ஆம் ஆண்டு நடந்த இந்த கொலைகள் தொடர்பாக, 2003ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு, இது குறித்து விசாரணை மேற்கொண்டது சிபிஐ. அதன் பின்னர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில், இறுதிக்கட்ட விசாரணை பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று (ஜனவரி 11) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிபிஐ நீதிமன்றம், குர்மித் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை விதித்து உத்தரவிட்டது. தண்டனை விவரங்கள் வரும் 17ஆம் தேதியன்று அறிவிக்கப்படுமென்று தெரிவித்தார் நீதிபதி ஜக்தீப் சிங்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon