மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

நன்மை செய்பவர்களுடன்தான் கூட்டணி: முதல்வர்

நன்மை செய்பவர்களுடன்தான்  கூட்டணி: முதல்வர்

தமிழக மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களைத்தான் ஆதரிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜனவரி 11) மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. அதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக, பாமக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 1400 பேர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்வில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்திலும் இந்தியாவிலும் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன, ஆட்சி செய்கின்றன. ஆனால், ஆளக்கூடிய கட்சிகளில் சிறந்த கட்சி அதிமுகதான். மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செயல்படுவதால் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியுள்ளது. தமிழக மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. அவர்களைத்தான் நாங்கள் ஆதரிப்போம். தமிழகத்திற்கு துரோகம் விளைவிப்பவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று அறிவித்தார்.

திமுக நடத்தும் ஊராட்சி சபைக் கூட்டங்களை விமர்சித்த அவர், “திமுக தலைவர் ஸ்டாலின் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்திவருகிறார். எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக இருந்தபோதெல்லாம் மக்களை சந்தித்து குறைகளை தீர்த்திருந்தால் அவர் சிறந்த அரசியல்வாதி. ஆனால் தற்போது செய்து கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. அவர் கிராமத்தையே பார்க்காதவர், சென்னையிலேயே பிறந்துவளர்ந்தவர். அதனால் கிராமத்தில் இருக்கும் பிரச்சினைகளை அவரால் தெரிந்துகொள்ள முடியவில்லை” என்று விமர்சித்தார்.

நான், துணை முதல்வர் பன்னீர்செல்வமெல்லாம் கிராமத்தில் பிறந்தவர்கள். அதனால் கிராம மக்களின் பிரச்சினை அறிந்து செயல்பட முடிகிறது என்றும் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பழைய நண்பர்களுக்கும், கட்சிகளுக்கும் பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக கூட்டணி குறித்து முதல்வர் பேசியுள்ளார்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon