மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

நிறுவனங்களின் பின்னணியை ஆராய வலியுறுத்தல்!

நிறுவனங்களின் பின்னணியை ஆராய வலியுறுத்தல்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெறும் தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முறைப்படுத்தக் கோரி, காஸ்கேட் என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 2015ஆம் ஆண்டில் நடந்த மாநாட்டில் பங்குபெற்ற தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராயததால், பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக அம்மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. “முதலீட்டாளர்கள் மாநாட்டை எதிர்க்கவில்லை. தமிழக அரசின் முயற்சியைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. இந்தாண்டு மோசடி நடக்கக் கூடாது. அதனால், மாநாட்டில் பங்கேற்க உள்ள தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும். மாநாட்டில் கலந்துகொள்ளும் நிறுவனங்களுக்கு எந்த மாதிரியான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அரசு தெரிவிக்க வேண்டும்” என்று காஸ்கேட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜனவரி 11) நீதிபதிகள் சத்தியநாராயணன் அமர்வு முன்பு வந்தது. அப்போது, குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனங்களை எதிர்மனுதாரராகச் சேர்த்து மனுதாக்கல் செய்ய மனுதாரர் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட அமர்வு, வழக்கு விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சென்னையில் 2019ஆம் ஆண்டுக்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், 27 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும், 44,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டைச் செய்ய உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon