மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி: நாளை அறிவிப்பு!

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி: நாளை அறிவிப்பு!

லக்னோவில் நாளை கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கும் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டணி குறித்து அறிவிக்கவுள்ளனர்.

2019 மக்களவைத் தேர்தல் தொடர்பான பணிகளை பல அரசியல் கட்சிகள் தற்போதே துவங்கிவிட்டன. மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சிகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், பாஜகவை தோற்கடிக்க மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இக்கூட்டணியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இணையலாம் என்று கூறப்பட்டது. நடந்துமுடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பகுஜன் சமாஜ் காங்கிரஸுக்கு ஆதரவளித்த நிலையில், ஆதரவை திரும்பப் பெற பரிசீலிப்போம் என்று கடந்த வாரம் மாயாவதி எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸை தவிர்த்துவிட்டு, எதிரும் புதிருமாக இருந்துவந்த சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கவுள்ளன. லக்னோவிலுள்ள தாஜ் ஹோட்டலில் நாளை (ஜனவரி 12) கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டணி குறித்தான அறிவிப்பை வெளியிடவுள்ளனர். சமாஜ்வாதி தேசிய செயலாளர் ராஜேந்திர சவுத்ரி, பகுஜன் சமாஜ் தேசிய பொதுச் செயலாளர் மிஸ்ரா ஆகியோர் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், சோனியா போட்டியிடும் அமேதி, ராகுல் போட்டியிடும் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தளம், நிஷாந்த் கட்சி ஆகியவையும் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் 73 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது. இதுதான் பாஜக ஆட்சியமைக்க மிகமுக்கிய காரணமாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon