மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

அயனாவரம் சிறுமி: குண்டர் சட்டம் ரத்து!

அயனாவரம் சிறுமி: குண்டர் சட்டம் ரத்து!

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 16 பேரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் 11 வயதான மாற்றுத் திறனாளி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அங்கு பணிபுரிந்து வந்த 17 பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணையை முடித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சென்னை மகளிர் நீதிமன்றத்தில் அண்மையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது.

17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையின் கீழ் கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, “குண்டர் சட்ட நடவடிக்கையை நீக்க வேண்டும், ஜாமீனில் வெளிவிட வேண்டும்” என கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரைத் தவிர மீதமுள்ள 16 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (ஜனவரி 11) நீதிபதிகள் சி.டி செல்வம், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. “குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையான குற்றம் செய்திருந்தால் கைது செய்யப்பட்டு 30 நாளில் குண்டர் சட்டம் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை 45 நாட்கள் கழித்துத்தான் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு 16 பேருக்கு விதிக்கப்பட்ட குண்டர் தடுப்பு நடவடிக்கையை ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon