மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

60 ஆயிரம் சம்பாதிப்பவர் ஏழையா? சிதம்பரம் கேள்வி!

60 ஆயிரம் சம்பாதிப்பவர் ஏழையா? சிதம்பரம் கேள்வி!

10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து விமர்சனம் செய்துள்ள ப.சிதம்பரம், “மாதம் 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவரும் ஏழை, 6 ஆயிரம் சம்பளம் வாங்குபவரும் ஏழையா” என்று விமர்சித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக இருப்பவர்கள், 5 ஹெக்டருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள், வீட்டுமனை அளவு 1000 சதுர அடிக்கும் குறைவாக வைத்திருப்பவர்கள் இடஒதுக்கீட்டை பெறுவதற்கு தகுதியானவர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை திமுக, அதிமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் எதிர்க்க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரித்து வாக்களித்தன.

மசோதா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப,சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக சிதம்பரம் இன்று (ஜனவரி 11) தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி, ஏழைகளாம். மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானமுள்ளவரும் ஏழை. இது எப்படி இருக்கு. ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

இடஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இம்முடிவை தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி கடுமையாக எதிர்த்திருந்தார். இந்த நிலையில் தற்போது சிதம்பரமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon