மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

புகையில்லா போகி: அரசு வேண்டுகோள்!

புகையில்லா போகி: அரசு வேண்டுகோள்!

போகி பண்டிகையன்று பிளாஸ்டிக் உள்ளிட்ட பழைய பொருட்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள், பழையனவற்றைக் கழிக்கும் வகையில் போகி கொண்டாடப்படும். அன்று வீட்டிலிருக்கும் பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். சமீபகாலமாக மக்கள் தங்களிடமுள்ள பிளாஸ்டிக், ரப்பர் பொருட்கள், டயர், டியூப் போன்றவற்றை எரிக்கின்றனர். இதனால், காற்று மாசுபாடு அதிகளவில் ஏற்படுகிறது. ஆண்டுதோறும் இந்த பிரச்சினை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இது குறித்து இன்று (ஜனவரி 11) தமிழக அரசு செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. “போகி பண்டிகையன்று பிளாஸ்டிக், பழைய டயர், ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. காற்றில் நுண் துகள்களின் அளவு ஒரு கனமீட்டரில் 100 மைக்ரோகிராம் இருக்க வேண்டும். ஆனால், கடந்தாண்டு போகி பண்டிகையின்போது 135 முதல் 386 மைக்ரோகிராம் வரை இருந்தது. இதனால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதனால், இந்தாண்டு போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும். இந்த பண்டிகையன்று, சென்னையில் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றுத் தரத்தினைக் கண்காணிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாதிரி சேகரித்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய பொருட்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டுமென தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டுமென மாணவர்களுக்கு இறைவணக்கக் கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon