மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஜன 2019

புத்தகக் காட்சி 2019: இளைஞர்கள் தேடும் அரசியல் நூல்கள்!

புத்தகக் காட்சி 2019: இளைஞர்கள் தேடும் அரசியல் நூல்கள்!

பியர்சன் லினேக்கர் ச.ரே.

புத்தகக் காட்சியில் இந்த ஆண்டு இளைஞர்களது வருகை கூடியுள்ளதை கவனிக்க முடிகிறது. ஆங்காங்கே இருக்கும் ஆங்கில நூல் அரங்குகளில் அரசியல் தொடர்பான நூல்களை வாங்கிப் படிப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டும் இந்த இளைஞர்கள், வாசிப்பினை ஒரு கூட்டுச் செயல்பாடாக நிகழ்த்துகின்றனர். நண்பர்களுக்குத் தாங்கள் வாங்கிய புத்தகங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், பிற நண்பர்கள் பரிந்துரைக்கும் நூல்களை வாங்கிப் படிப்பதன் மூலமும் ஓர் அலாதியான அனுபவமாக வாசித்தலை உருமாற்றுகின்றனர்.

"நாங்கள் கடந்த மூன்றாண்டுகளாக இந்தப் புத்தகக் காட்சிக்கு வந்துகொண்டிருக்கிறோம். தொடக்கத்தில் சிறுகதை, நாவல் என்று இலக்கிய நூல்களை வாசிக்கத் தொடங்கிய நாங்கள், பின்னர் அதன் வழியே கிடைத்த அறிமுகத்தின் அடிப்படையில் தீவிர அரசியல் நூல்களைப் படிக்கத் தொடங்கினோம். இதுவரை எங்களது வாசிப்பனுபவத்தின் துணைகொண்டு மேலும் எங்களது அரசியல் அறிவை வளர்க்கும்வண்ணம், அரசியல் நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பதிப்பகங்களைத் தேடிச் சென்று நூல் பட்டியல் ஒன்றை உருவாக்கியுள்ளோம். நவீனத்துவம் பின்நவீனத்துவம் பற்றிய அறிமுக நூல்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்று தங்களது பயணத்தையும் தேடலையும் தங்கள் நண்பர்கள் குழு சார்பில் வெளிப்படுத்தினார் சவுண்டு எஞ்சினியராகப் பணிபுரியும் பிரபாகர்.

நூல்களைத் தேர்வு செய்யும் விதம் பற்றிக் கூறும் உதவி இயக்குநர் திவாகர், "எங்களுக்கு இதுபோன்ற நூல்களை அறிமுகப்படுத்தி அதற்கான ரசனையை ஏற்படுத்தியது இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடும் எங்கள் நண்பர்கள்தாம். முதலில், அறிமுகமான எழுத்தாளர் சார்ந்து நூல்களைத் தேர்ந்தெடுப்போம். மேலும் அரசியல் நூல்கள் தேவைப்படும் நேரங்களில் விடியல், எதிர், அடையாளம், காலச்சுவடு போன்ற பதிப்பகங்களை அதிகம் நாடுவோம்" என்றார்.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்களைப் பற்றிக் கேட்டபோது "உலகமயமாக்கல் பற்றிய நூல்களைத் தேடிக் கொண்டிருந்தோம். அப்போது சிக்கியது "Reality of Globalisation - Virtualization and its effects" என்ற டாக்டர் அரிபண்டி பிரசாத் ராவின் இந்நூல். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படி உலகமயமாக்கலைப் பரவலாக்கம் செய்கிறார்கள் என்பதை இப்புத்தகம் விளக்குகிறது. அடுத்து 2003-ஆம் ஆண்டு வெளிவந்த பாவ்லோ கோயெலோவின் (Paulo Coelho) "Eleven Minutes" நாவலையும் வாங்கியுள்ளோம். ஆவணப் படத்தின் மூலம் அறிமுகமான ஜான் பெர்கின்ஸின் 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' தமிழில் கிடைக்கப் பெற்றாலும், அதன் மூலமான ஆங்கில மொழியில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அதை ஆங்கில நூல்கள் கிடைக்கும் அரங்கங்களில் தேடிக் கொண்டிருக்கிறோம்" என்று கூறினார் சினிமா பயின்ற கிஷ்வர் தாஜ்.

பெருகும் இளைஞர்களது வருகை தமிழ் அறிவுச் சூழலை நிச்சயம் செழுமைப்படுத்தும் என நம்பலாம்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon