மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

ரசிகர்களால் வசூல் குவிக்கும் பேட்ட - விஸ்வாசம்!

ரசிகர்களால் வசூல் குவிக்கும் பேட்ட - விஸ்வாசம்!

தமிழ் சினிமா 365: பகுதி 11

இராமானுஜம்

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆடும் கிரிக்கெட் போட்டிக்கு இணையான பரபரப்பு நேற்று ரிலீஸான ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்களுக்கு இடையில் நடந்த வசூல்போட்டியில் நிலவியது.

தெறி படம் தொடங்கிக் கடந்த தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் வரை ஏற்றத் தாழ்வு இருந்தாலும் தமிழ்நாட்டு வசூலில் முதல் இடம் நான் தான் என்று நங்கூரமிட்டு நாற்காலியில் அமர்ந்து விட்டார் நடிகர் விஜய். இரண்டாம் இடம் யாருக்கு என்ற போட்டியில் தான் அஜித், ரஜினி இருவரும் உள்ளனர்.

முதல் நாள் மொத்த வசூல் தகவல்கள் அடிப்படையில் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி விஸ்வாசம் முதல் இடத்தையும், பேட்ட இரண்டாம் இடத்தையும் பிடித்திருக்கிறது.

அஜித் குமார் - ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களைத் தவிர்த்து திரைப்பட விமர்சகர்கள், மற்றும் பார்வையாளர்களைப் பொறுத்தவரை இரு படங்களுமே சுமார் ரகமே.

இரு படங்களின் இயக்குநர்களும் நாயக நடிகர்களின் ரசிகர்களாகவே படத்தின் திரைக்கதையை அமைத்துப் படத்தை இயக்கியிருக்கிறார்கள். இது அவர்களது தீவிர ரசிகர்களுக்கான படம். அதுவே வசூலைக் குவிப்பதற்கு போதுமானதாக அமையாது. ஒரு வேளைக் குடும்பங்கள் படம் பார்க்க வரும் பட்சத்தில் வசூல் அதிகரிக்கலாம் என்பதே தியேட்டர் வட்டாரத் தகவல்.

நேற்றைய நிலவரத்தைப் பொறுத்தவரை அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் சுமார் 15 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது.

‘பேட்ட’ முதல் நாள் வசூல் 11.5 கோடி ரூபாயை எட்டிப்பிடித்துள்ளது. பேட்ட படத்தின் நீளத்தைக் குறைத்தால் வசூல் அதிகரிக்கும் எனத் தியேட்டர் உரிமையாளர்களும், படம் பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்களும் கூறிவருகிறார்கள். எனவே ரஜினிகாந்த் உடன் பேசி படத்தின் நீளத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குறைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஸ்வாசம், பேட்ட படங்களின் தற்போதைய வசூல் இயல்பான வசூல் இல்லை. இதற்குப் பின்னால் ரஜினிகாந்த், அஜித் குமார் ரசிகர்களின் முதலீடு முக்கியப் பங்கு வகிக்கிறது.

தமிழகம் முழுவதும் முக்கியமான நகரங்களில் ரசிகர்கள் முதல் நாள் அனைத்துக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை மொத்தமாகக் கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால் மொத்த வசூல் அதிகமாகியிருக்கிறது. அப்படி அவர்கள் வாங்கியிருக்கவில்லை என்றால் இரண்டு படங்களின் மொத்த வசூல் 30% குறைவாகவே இருந்திருக்கும்.

அது மட்டுமின்றி பெருநகரங்களில் அதிகாலை சிறப்புக் காட்சிக்கான டிக்கெட் அதிகபட்சம் 2000 ரூபாய் முதல் குறைந்த பட்சம் 300 ரூபாய் வரை தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டதும் வசூல் அதிகரிக்கக் காரணம் என்கின்றனர் படங்களை திரையிட்டுள்ள தியேட்டர் உரிமையாளர்கள்.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னரே அரசு நிர்ணயித்த கட்டணத்தில் இப்படங்களின் டிக்கெட் விற்பனை இருக்கும். அப்போதுதான் நியாயமான வசூல் நிலவரம் தெரிய வரும். அதுவரை வரும் வசூல் விபரங்கள் அனைத்தும் சட்டத்துக்கு புறம்பான வசூல் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

முந்தையக் கட்டுரை இரண்டாம் இடத்துக்கு மோதும் ரஜினி, அஜித்

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon