மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

கள்ளக்குறிச்சி: திமுகவுக்கு புதிய மாவட்டச் செயலாளரா?

கள்ளக்குறிச்சி: திமுகவுக்கு புதிய மாவட்டச் செயலாளரா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமி உருவாக்கினாலும் உருவாக்கினார் அதிமுகவினரை விட திமுகவினருக்குள்தான் அதிக உற்சாக அலை ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில கள்ளக்குறிச்சி மாவட்டத்தை குமரகுருவுக்கு மட்டுமல்ல, திமுகவினருக்கும்தான் பரிசாகக் கொடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

திமுக கொண்டாட்டத்துக்கு என்ன காரணம்?

“விழுப்புரம் தெற்கு, வடக்கு, மத்திய மாவட்டங்கள் என சில வருடங்களுக்கு முன் பிரிக்கப்பட்டாலும் அதற்கு முன்பு பல வருடங்கள் பொன்முடியின் ஆளுகைக்கு உட்பட்டுதான் நாங்கள் இருந்தோம். மாவட்டப் பிரிவினைக்குப் பிறகு கூட கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்டத்தினர் தலைமை அறிவிக்கும் போராட்டங்களை எல்லாம் பொன்முடியோடு சேர்ந்து விழுப்புரம் சென்றுதான் நடத்த வேண்டும். மேலும் கட்சியினர் மீதான பொன்முடியின் அணுகுமுறை பற்றியும் தொண்டர்களுக்கு சில குமுறல்கள், குறைகள் இருந்து வந்தன.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் என்று அறிவித்ததும்.... கட்சி ரீதியாகவும் இது தனி மாவட்டம் ஆகிவிடும் என்பதால் பொன்முடியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடலாம் என்று பல திமுக நிர்வாகிகள் நம்புகிறார்கள்” என்பதே அவர்களின் உற்சாகத்துக்குக் காரணம்.

இந்த நிலையில்தான் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக இருக்கும் பொன்முடி விழுப்புரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து, ‘திருக்கோவிலூர் தொகுதி தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்துடனேயே இருக்க வேண்டும். அதைக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைக்கக் கூடாது’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். திருக்கோவிலூர் தொகுதிதான் இப்போது பொன்முடியின் தொகுதி. அதை கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு சேர்த்துவிட்டால் அரசியல் ரீதியாக தனக்கு சரிப்பட்டு வராது என்பதால்தான், கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கிட தமிழக அரசு ஆணையிட்டுள்ள நிலையில், திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்கும்படி கலெக்டரை சந்தித்திருக்கிறார் பொன்முடி.

அதேநேரம் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் தற்போதைய மாவட்டச் செயலாளரான அங்கயற்கண்ணி மாசெவாக தொடர்வாரா அல்லது புதிய மாவட்டத்துக்கு புதிய மாவட்டச் செயலாளரை திமுக தலைமை தேர்ந்தெடுக்குமா என்று திமுகவுக்குள் பெரும் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது,

இதுபற்றி விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவினரிடம் பேசியபோது, “கள ஆய்வின் போது விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் அங்கயற்கண்ணி மீது பல புகார்கள் தலைவர் ஸ்டாலினிடம் சொல்லப்பட்டது.அதைக் கேட்டு அப்போதே கண் சிவந்தார் ஸ்டாலின். ஆனால் அதன் பின் கலைஞர் உடல் நலக் குறைவு, மரணம், தலைவர் ஆனது என முக்கிய நிகழ்வுகளால் கள ஆய்வுகளின் மீது நடவடிக்கைத் தள்ளிப் போடப்பட்டது.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் என்ற புதிய வடிவம் கிடைத்துள்ள நிலையில் திமுக நிர்வாக அமைப்பிலும் புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. அங்கயற்கண்ணிக்கும் திமுக ஒன்றிய செயலாளர்களுக்கும் இடையே சில முரண்பாடுகள் நிலவி வருகின்றன. எனவே கள ஆய்வு புகார்களுக்கு இப்போது பரிகாரம் தேடுவதாக எண்ணினால் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுகவுக்கு புதிய செயலாளர் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அது தலைவர் கையில்தான் இருக்கிறது.

இந்த நேரத்தைப் பயன்படுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஆகிவிடலாம் என்று திமுகவில் சிலர் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தியாகதுருகம் ஒன்றிய செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன் ரேஸில் முன்னணியில் ஓடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு தலைமையில் இருக்கும் செல்வாக்கு காரணமாகவும், புதிய மாவட்டத்தில் அடர்த்தியாக இருக்கும் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் இந்த பொறுப்பு அளிக்கப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் உடையார் கணக்கையும் நாம் தெரிந்துகொண்டாக வேண்டும்

(தொடரும்)

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon