மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

திருமண வதந்தி: விஷால் மீண்டும் மறுப்பு!

திருமண வதந்தி: விஷால் மீண்டும் மறுப்பு!

திரையுலகைப் பொறுத்தவரை நடிகைகளின் திருமணம் பற்றிய வதந்திகள் பரவுவதும் சம்பந்தப்பட்ட நடிகைகள் பின் அதை மறுப்பதும் தொடர்ந்து நடந்துவருவது தான். ஆனால் நடிகர் விஷாலின் திருமணம் குறித்து நீண்ட காலமாக புதிய வதந்திகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. வழக்கம் போல் இந்த முறையும் விஷால் அதை மறுத்துள்ளார்.

நடிகர் சங்க பொதுச் செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆகிய இரு பதவிகளை வகிக்கும் விஷால் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். இவரும் நடிகை வரலட்சுமியும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் முதலில் வதந்தி பரவியது. இதை இருவருமே மறுத்தனர்.

விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி விஷால் விரைவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை திருமணம் செய்யவுள்ளதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் விஷாலின் பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், “நான் அனிஷாவை இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்யவுள்ளேன். நிச்சயதார்த்தம், திருமணம் ஆகியவற்றின் தேதிகள் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. வெள்ளிக்கிழமை இரு குடும்பங்களும் சந்தித்துப் பேசவுள்ளனர். இந்த வார இறுதியில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். இது பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்று செய்திகள் வெளியாகிவருகிறது. இல்லை, இருவரும் காதலித்து திருமணம் செய்யவுள்ளோம். இது பலருக்கு தெரியாது. நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதில் வைத்துத் தான் எனது திருமணம் நடைபெறும் என்று அறிவித்திருந்தேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. விரைவில் கட்டிட வேலைகள் முடிவுக்கு வரும். ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறலாம்” என்று விஷால் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த விஜய் ரெட்டி, பத்மஜா தம்பதியரின் மகள் அனிஷா என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால் இதை மறுத்து நேற்று (ஜனவரி 10) இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “எனது திருமணம் தொடர்பாகத் தவறான தரவுகளுடன் தவறான செய்திகள் வருவது ஆச்சர்யமாக இருக்கிறது. தயவு செய்து திருத்துங்கள். இது அழகல்ல. இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. எனது திருமணம் பற்றிய செய்தியை நானே விரைவில் மகிழ்ச்சியுடன் அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon