நான்கு நீதிபதிகளின் தீர்ப்பு விளக்கும் நுட்பங்கள்!
பெரும்பான்மை தீர்ப்பில் நீதிபதிகள் தீபக் மிஸ்ராவும் கான்வில்கரும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்த ஷிரூர் மடம் மற்றும் எஸ்.பி.மிட்டல் வழக்கில் கூறியிருந்தது போல அய்யப்பன் பக்தர்கள் தனியொரு மத உட்பிரிவு இல்லையென்றும் இந்து மதத்திற்கென பொதுவாக இருக்கும் மதக் கோட்பாடுகளுக்கப்பாற்பட்டு இவர்களுக்கென பிரத்யேகமான கோட்பாடுகள் எதுவும் இல்லையென்றும் எனவே மத உட்பிரிவுகளை சிறப்பு விதிவிலக்கு அளிக்கும் அரசியல்சட்டப் பிரிவு 26 இவர்கள் விஷயத்தில் பொருந்தாது எனவும் தீர்ப்பளித்தனர்.
குடிமக்கள் அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 25(1) இந்த உரிமையை பெண்கள் உள்பட "அனைவருக்கும்" எனக் குறிப்பிட்டு வழங்கியிருக்கிறது என்றும் சில உடற்கூறியல் காரணங்களுக்காக இதிலிருந்து பெண்களுக்கு விலக்களிக்க இடமில்லை என்றும் கேரள இந்து பொது வழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு அனுமதி பெறுதல்) விதிகளில் உள்ள 3ஆவது விதி இந்த அரசியல் சட்ட அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் தம் தீர்ப்பில் தெரிவித்தனர்.
சபரிமலை நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழிபாட்டு உரிமை உள்பட மத உரிமை வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 25இல் 'தார்மிக நெறி' காரணங்களுக்காக சிலர் விஷயத்தில் விதிவிலக்கு அளிக்க வாய்ப்புள்ளது என்று வாதிட்டிருந்தார்.
இது குறித்து பெரும்பான்மை நீதிபதிகள் அரசியல் சட்டப் பிரிவு 25 (1) இல் குறிப்பிடப்பட்டிருக்கும் 'தார்மிக நெறி' சில தனிநபர்கள் அல்லது ஒரு பிரிவினர் அல்லது ஒரு மதக்குழுவின் தார்மீக நெறியாக பார்க்கப்படக்கூடாது என்றும் அது 'அரசியல்சட்ட தார்மிக நெறியாக' பார்க்கப்பட வேண்டும் எனக் கூறி இந்த வாதத்தை நிராகரித்தனர்.
இதோடு நின்றுவிடாமல் அரசியல் சட்டப் பிரிவு 25இல் விதிவிலக்குக்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள பொதுவாழ்க்கை ஒழுங்கு, தார்மிக நெறி மற்றும் ஆரோக்கியம் ஆகியன 10இலிருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்களின் மத வழிபாட்டு உரிமைக்குத் தடைபோடவும் சபரிமலை கோவிலுக்குள் சென்று பிரார்த்தனை செய்வதற்கு அவர்களுக்கு இருக்கும் சட்ட உரிமையை மறுப்பதற்கும் எவரும் இஷ்டப்படும்படி வர்ணம் பூசப்படக்கூடிய ஒரு கருவியாக பயன்படுத்த முடியாது என்றும் தம் தீர்ப்பில் தெரிவித்தனர்.
சபரிமலை தேவஸ்தான போர்டு கோருவதுபோல பெண்கள் வழிபாட்டு உரிமையை மறுப்பது மதத்தின் பிரிக்கப்பட முடியாத பகுதியல்ல என்றும் நீதிபதிகள் தம் தீர்ப்பில் கூறினர். ஆனந்த மார்க் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியது போல பெண்கள் வழிபாட்டு உரிமையை மறுக்கும் இந்த நடைமுறையைப் பின்பற்றாவிட்டால் இந்துமதத்தின் இயல்பே மாறிவிடும் என்பது கிடையாது. மேலும் இந்த நடைமுறை எல்லாநேரங்களிலுமே பின்பற்றப்படுவதில்லை என்றும் தங்கள் குழந்தைகளுக்கு முதல் அரிசிச்சோறு ஊட்டும் சடங்கிற்காக ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்கள் பூஜை செய்ய 10 இலிருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம் என சபரிமலை தேவஸ்தான போர்டே கேரள உயர்நீதிமன்றம் முன்பு ஒப்புக்கொண்டுள்ளது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மேற்கண்ட காரணங்களுக்காக இந்த ரிட் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு சபரிமலை கோவிலுக்கு சென்று பெண்கள் வழிபடுவதற்கு உத்தரவாதம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். தனித்தனியே தீர்ப்பு வழங்கிய நாரிமனும் சந்திரசூடும் இந்த அம்சங்கள் அனைத்தோடும் உடன்பட்டனர். கூடுதலாக நீதிபதி சந்திரசூட் தன் தனித்தீர்ப்பில் ஆணித்தரமான சில விஷயங்களைப் பதிவுசெய்தார். அவை பின்வருமாறு:
மத வழிபாட்டிலிருந்து பெண்கள் விலக்கிவைக்கப்பட வேண்டும் என ஒருவேளை மதக் கோட்பாட்டு ஏடுகள் குறிப்பிட்டிருந்தாலும் சுதந்திரம், கௌரவம், சமத்துவம் என்ற அரசியல் சட்ட விழுமியங்கள் அதைவிட உயர்ந்தவை. பெண்களை விலக்கிவைக்கும் நடைமுறைகள் அரசியல்சட்ட தார்மிக நெறிகளுக்கு எதிரானவை.
பெண்களுடைய கண்ணியத்தைக் கேவலப்படுத்தி, சமமான குடிமக்களாக அவர்களை பாவிக்காதவண்ணம் செய்யும் நடைமுறைகளுக்கு நீதிமன்றம் அரசியல் சட்ட நியாயத்தைக் கற்பிக்க முடியாது.
மாதவிடாய் நிலைமையை அடிப்படையாகக் காட்டிப் பெண்களை சமூகரீதியாக விலக்கிவைப்பது தீண்டாமையின் ஒரு வடிவம். அரசியல் சட்டவழிப்பட்ட ஒரு அமைப்புமுறையில் தனிநபர்களைக் கறை படிந்தவர்களாகக் காட்டும் 'பரிசுத்தம், தீட்டு" ஆகிய கருத்துகளுக்கு இடமில்லை.
கேரள இந்துப் பொதுவழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு அனுமதி பெறுதல்) விதிகளில் உள்ள 3ஆவது விதி கேரள இந்துப் பொதுவழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு அனுமதி பெறுதல்) சட்டம் 1965 (Act) ஐ மீறி இருந்தாலும் மீறாமலிருந்தாலும் சரி அது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.
மேற்கண்டவாறும் சற்றே மாறுபட்ட முகாந்திரத்தின் அடிப்படையில் அறைந்தாற்போல் சில கருத்துகளையும் நீதிபதி சந்திரசூட் முன்வைத்திருந்தார்.
ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் சில தீர்ப்புகள் அனைவருக்குமான வழிபாட்டு உரிமைக்கு முரணாக அமைந்திருந்தன. எடுத்துக்கட்டாக, முல்கி கோவில் வழக்கு என்று அழைக்கப்படும் வழக்கில் (அதாவது ஸ்ரீ வெங்கட்ரமண தேவரு மற்றும் இதரர்கள் vs. மைசூர் மாகாணம் மற்றும் இதரர்கள் வழக்கில்) 1958இல் மெட்ராஸ் கோவில் நுழைவு அதிகாரமளிக்கும் சட்டம் 1947க்கு சவால் விடப்பட்ட வழக்கில் சரஸ்வதி பிராமணர்களைத் தவிர வேறு எவரையும் குறிப்பாக தலித் மக்களை அனுமதிக்காத விஷயத்தில் அங்கனம் அனுமதிப்பது வழிபாட்டு விதிகளை மீறும் பட்சத்தில் அல்லது சிலர் கோவிலுக்குள் நுழைவதால் விக்கிரகத்துக்கு தீட்டுபட்டுவிடுமென்றால் 'அத்தியாவசிய மத நடைமுறை' பாதிக்கப்பட்டுள்ளது என்றே பொருள் என்று அப்போது அந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும் அதில் அது ஒரு மத உட்பிரிவின் கட்டுப்பாட்டிலுள்ள தேவாலயம் என்று குறிப்பிட்டிருந்தது.
அதேபோல, ஆஜ்மீர் தர்கா கமிட்டிக்கும் சய்யது ஹுசைன் அலி என்பவருக்குமிடையிலான வழக்கிலும் இது போல எதிர்மறையான தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆஜ்மீர் தர்காவில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வழிபடுகின்றனர், எனவே அது ஒரு குறிப்பிட்ட மத உட்பிரிவுக்குச் சொந்தமானது அல்ல என்று கோரித் தொடரப்பட்ட வழக்கில் இந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. இதுபோல வேறு சில வழக்குகளும் எதிர்மறையான தீர்ப்புகளுடன் உள்ளன. இத்தகைய தீர்ப்புகள் எதிர்காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டிய அவசியம் உள்ளது என்று நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் ஆகியோர் குறிப்பிட்டிருக்கின்றனர்.
மீண்டும் அரசியல் தீர்வை நோக்கி
இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை உடனடியாக விசாரிக்க வேண்டுமென்ற மனுதாரர் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஆனால் அம்மனு அனுமதிப்பட்டுள்ளது.
இதற்கிடையே முத்தலாக் விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்செய்தே ஆக வேண்டும் எனக் குரலெழுப்பிய பாஜக சபரிமலை விஷயத்தில் மதச் சடங்குகள் விவகாரங்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க மாட்டோம் என பல்லாயிரக்கணக்கான ஆதரவவலர்களை அணிதிரட்டி வழிபடச்செல்லும் பெண்களை தடுத்துவருகிறது. பாஜக தலைவர் அமித் ஷாவும் சபரிமலை தந்திரியம் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னும் பதிவாகவில்லை.
பெண்கள் வழிபாட்டுக்கு ஆதரவாகவும் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வழிபட விரும்பும் பெண்களுக்கு ஆதரவாக அரணாக நின்றனர். விவகாரம் சட்டத் தீர்வுக்குப்பிறகும் தீர்வுகாணப்படாததால், கருத்தியல் அரசியல் தீர்வு அரங்கினுள் மீண்டும் பிரவேசித்துள்ளது.