மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அலோக் வர்மா

என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அலோக் வர்மா

சிபிஐ பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று கூறி அலோக் வர்மா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மீண்டும் சிபிஐ இயக்குநராகப் பதவி ஏற்ற அலோக் வர்மாவை, பிரதமர் மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட உயர்மட்ட குழு மீண்டும் சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கம் செய்து, தீயணைப்புத் துறை குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல்படை இயக்குநராக நியமனம் செய்துள்ளது. இந்த முடிவுக்கு மல்லிகார்ஜூன கார்கே மட்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்த தொழில் அதிபர் ஒருவரிடம் அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றது தான் சிவிசி அவர் மீது சுமத்திய முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று. இதுதவிர ஐஆர்சிடிசி ஊழல் வழக்கில், முக்கிய நபர் ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல் இருக்க அலோக் வர்மா நடவடிக்கை எடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அலோக் வர்மா விவகாரத்தில், அவரது தொலைபேசி உரையாடலை ரா உளவு அமைப்பு இடைமறித்துப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சிவிசி உறுதி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அலோக் வர்மா நேற்று நள்ளிரவு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “அற்பமான, ஆதாரமற்ற மற்றும் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. இவை அனைத்தும் எனக்குப் பகையான ஒரு நபரால் (ராகேஷ் அஸ்தனா) உருவாக்கப்பட்டவை. சிபிஐ, உயர்மட்ட பொது இடங்களில் நடைபெறும் ஊழல்களை விசாரிக்கும் முதன்மையான விசாரணை அமைப்பு. இந்த அமைப்பின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இது வெளிப்புற தாக்கங்கள் இல்லாமல் செயல்பட வேண்டும். இந்த அமைப்பை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் நேர்மையை நிலைநாட்ட முயற்சித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விவகாரத்தில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ளவே அலோக் வர்மாவை, மோடி நீக்கம் செய்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon