மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

ஆக்கிரமிப்பு அகற்ற ராணுவத்தைப் பயன்படுத்தவா?: நீதிமன்றம்!

ஆக்கிரமிப்பு அகற்ற ராணுவத்தைப் பயன்படுத்தவா?: நீதிமன்றம்!

அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக ராணுவத்தைப் பயன்படுத்தவும் தயக்கமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியிலுள்ள கரிக்காட்டு குப்பம் சுனாமி குடியிருப்பில் உள்ள அரசு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகப் புகார் எழுந்தது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை கடந்தாண்டு ஜனவரி மாதம் விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் வைத்தியநாதன் அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்றும்படி கரிக்காட்டு குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பித்து ஓராண்டு ஆகியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், அரசுக்கு எதிராக ஜான்சி ராணி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜனவரி 11) நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் வைத்தியநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நில ஆக்கிரமிப்பாளர்களால் தனது கணவர் தாக்கப்பட்டதாக மனுதாரர் ஜான்சி ராணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“ஆக்கிரமிப்புகளை இன்றைக்குள் அகற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும். தேவைப்பட்டால் ராணுவத்தை வரவழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடவும் தயங்கப் போவதில்லை” என நீதிபதிகள் எச்சரித்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் ராணுவத்தை வைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றியதைச் சுட்டிக்காட்டினர் நீதிபதிகள்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon